நெஞ்சில் நிலைத்து நிற்கும் கஞ்சி - கவிதை!!

 


ஒருநேரச் சாப்பாட்டுக்கு

ஒன்றுமே இல்லாத காலம்
வடிச்ச கஞ்சியை அம்மா
வாத்துத் தரும்போது
வால்காட்டிட்டு ஓடினாங்கள்
வடிவாக் காச்சேல என்று
வாய்காட்டிட்டுப் போனாங்கள்
உப்புக் காணாது என்று
உள்ளுக்குள்ள எரிஞ்சனாங்கள்
உப்பிடியோ காச்சிறதென்று
ஒப்பிட்டுக் கதைச்சனாங்கள்
பால் ஏன் விடேல என்று
பாஞ்சு விழுந்தனாங்கள்
பச்சத்தண்ணியா இருக்கென்று
பஞ்சம் தெரியாம வெறுத்தனாங்கள்
உதுவும் ஒரு சாப்பாடோ என்று
உதாசீனம் செய்தனாங்கள்
கஞ்சியே இனி வேண்டாமென்று
கெஞ்சிக் கூத்தாடினாங்கள்
அலட்சியப்படுத்திய இந்த
அடிமக்கள் உணவைத்தான்
இலட்சியம் இழந்தபோதும் உயிரை
இழக்கவிடாமல் குடிச்சனாங்கள்.

-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.