சொக்லேற் கனவுகள் 35 - கோபிகை!!


அன்று அனு- ஆதி வீட்டில்

ஒரு விசேச நாள்.

ஆதியின் அன்னைக்கும்

அனுவின் அன்னைக்கும் 

அகவைநாள்.....


ஒரே ஆண்டில்

ஒரே நாளில் 

பிறந்தவர்கள்

இருவரும்.....


ஆதியின் அறையில்தான்

அனுதியும் இருந்தாள்.

'அன்னையர்க்கு

என்ன பரிசு கொடுக்கலாம்'

என்ற ஆராய்தலில்.....


ஒரே மாதிரி சாறி....

ஒரே மாதிரி மணிக்கூடு...

ஒருவர் சொல்ல

மற்றவர் தடுக்க, 


"அப்ப என்தான்டா

வாங்குறது?"

பொறுமையிழந்து 

அனுதி  கேட்க,


'சங்கிலி.....'

'ஒரே மாதிரி சங்கிலி,

அழகான பென்ரன்,

அதில எங்கட  படம்....'


"என்னடா சொல்ற,

இதெல்லாம் 

இனிமே தயார் பண்ணி

எடுக்கமுடியுமா?"


"ஐயா ஏற்கனவே

சொல்லிவைச்சிட்டார்,

நீ வந்து ஒருதடவை

பாத்தா சரி"


"அடக்கழுதை...

ஏன்டா இதை 

முதல்லயே என்னட்ட

சொல்லேல்ல...."


'எவ்வளவு நேரமா

நான் யோசிக்கிறன்,

சத்தமில்லாம

இருக்கிறாய்....?'


"மூளையை வைச்சு

என்ன செய்யப்போறாய்,

துருப்பிடிச்சிடும்

கொஞ்சமாவது யோசி..."


'அடி......'

அனுதி தலையணையை

எடுத்தபடி துரத்த

அவன் பாய்ந்து ஓடினான். 


ஓடி வந்தவள்

வயிற்றில் கைவைத்தபடி

அப்படியே நின்றுவிட்டு

'நான் வெளிக்கிட்டு வர்றன்'

என்றபடி விரைந்து நடந்தாள். 


"ஏய்....இன்னுமா முடியேல்ல?"

ஆதி கேட்க,

"வெளிக்கிட வேண்டாமாடா"

அனுதி பதில் தந்தாள். 


'ம்ம்....'

குதூகலச் சலிப்போடு

அருகில் இருந்த

கதிரையில் அமர்ந்தான்.


வீட்டுப் பெரியவர்கள்

பிராத்தனைக்குச் சென்றிருந்தனர். 

வேலை முடிந்து வந்தவன்

இதோ பரிசுவாங்க ஆயத்தமாய்....


சுரிதாரின் துப்பட்டாவை

ஊசியால் குத்தியபடியே

மெல்ல நடந்து 

வெளியே வந்தாள் அனுதி,


முத்து துளிகளாய்

அரும்பியிருந்தது

வியர்வை முகத்தில்,

நடையில் சிறு சிரமம்....


நிமிர்ந்து பார்த்த ஆதி,

'அனூ....என்ன ....ஏன் 

இப்பிடி வியர்க்கிறது?'

அருகில் வந்து கேட்டான். 


சட்டென்று 

நாட்காட்டிக்குத் தாவிய 

அவன் விழிகள்

அவளில் பதிந்தது. 


'இப்ப எங்கயும்

போகவேண்டாம்...

பரிசை வீட்டுக்கே 

கொண்டுவரச் சொல்றன்..'


'நீ போய் படுத்திரு

உடுப்பு மாத்திட்டு வர்றன்'

என்றுவிட்டு 

வீடு நோக்கி நடந்தான். 


கட்டிலில் சாய்ந்திருந்த அனுதி

நிமிர்ந்து பார்த்தாள். 

கையில் இஞ்சி தேனீருடன்

நின்றான் ஆதி.....


'ம்....குடி.....சரியாயிடும்..'

அவன் தலைதடவ

ஒரு பூவைப்போல

இயல்பும் இனிமையுமாய்

மலர்ந்தது அனுதியின் முகம்....


'அன்னையின் பிரதியாய்

ஆண்துணை அமைவது

பெண்ணுக்கு வரம்,'

எண்ணிக்கொண்டாள் அனுதி.....கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.