இன்னும் ஏந்தியிருக்கிறோம் தீப்பந்தங்களை மனதிலே!!

 


ஆம் நாங்கள்

பயன்படுத்துகிறோம்

உங்களை..

ஏனென்று கேட்க நாதியற்ற

எம்மினத்தில் பிறந்து மிச்சமின்றி

எரிந்துபோன உங்களைத்தான் வேறுவழியின்றி

நாங்கள் பயன்படுத்துகிறோம்..

எது நடந்தாலும் தலையிலே இடி விழுந்தாலும் எட்டிநின்று பார்க்கும் எம்மவர்களை அறைந்தெழுப்ப உங்களைத்தான் பயன்படுத்துகிறோம்..

உடல் உருகியோடிய அந்தப் படத்தையும்

உறுப்புகள் அறுந்த அந்த உடலையும் காட்டித்தான் உசுப்பிப் பார்க்கிறோம் எம்மவர்களை..

எத்தனை விழிகள் ஏங்கிச் செத்தன எம்திசை நோக்கி கண்மூடிய அத்தனை விழிகளின் வலிகளையும் ஏந்திக்கொள்கிறோம்..

எக்காலமென சொல்லிட முடியாது ஆனால் நிச்சயம் ஒருகாலம் வென்றுவைப்போம் நீங்கள் புதைந்த இடத்திலேயே உங்கள் கனவுகளை..

உண்மைதான் கோடிகளில் உறவிருந்தென்ன பயன் சிந்திச் சிதறியதை கூட்டிப்பெருக்கவும் வழியற்று வலியோடுதானே புதைந்து போயிருப்பீர்கள் அந்தப் பிணக்குவியலுக்குள்..

அந்தவேளையில் நாங்கள் இங்கு கோசமிட அனுமதி கேட்டுக்கொண்டிருந்தோம்

ஒரு அடிமைக்கு மற்றொரு

அடிமையால் வேறென்ன செய்திடமுடியும்..

புறத்திலும் தொல்காப்பியத்திலும்

அதீதக் கற்பனையெனப் படித்த வரிகளை நேரிலே நடத்திக்காட்டிய எம்மாவீரர்களே உங்களைத்தான் பத்திரப்படுத்தியிருக்கிறோம் எங்கள் நெஞ்சங்களில்..

பாசிபிடித்துப் பதத்துப்போன எங்கள் நெஞ்சையெல்லாம் சுரீரெனப் பற்றிடச் செய்கிறோம் உங்கள் தியாகம் படித்து..

உருக்குலைந்து போன உங்கள் பெருங்கனவுகளை மீண்டும் உருவேற்றிட உறுதியேற்கிறோம்..

கற்பனையிலேனும் கொடியேற்றிப் பார்க்கிறோம் நமக்கான நம் தேசத்தில்.

உருகிடும் மெழுகென விழிநீர் வடித்துத் தேம்பிடும் இவர்களென்ன செய்திட இயலுமென எக்காளமிடும் எம்மினத் துரோகிகளே..

நாங்கள் கடத்திக் கொண்டிருக்கிறோம் எங்கள் வலிகளையும் கனவுகளையும் கடத்திக்கோண்டிருக்கிறோம்..

அது நிச்சயம் ஒருநாள் ஏதேனும் ஒரு கரத்திலும் இதயத்திலும் உயிர்பெறும் அது எமக்கான நீதிபெறும்..

இது கற்பனையோ பேராசையோ அல்ல.. அலமாறியின்மேல் தூசிபடிந்த புத்கமும் சில பக்க பத்திரிக்கைகளும் அந்தச் சிறுவன் கையில் கிடைத்ததால் அவன் என்ன செய்தானோ அதைவிட அதிகமாகவே எம்மால் எதிர்பார்க்க முடியும்..

மறந்திடவேண்டாம் அவர் பெயரை

அவர் ஏற்றிய தீபம் இன்னும் அணைந்திடவில்லை..

அது இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது

எங்கள் கரமேந்தவிருக்கும் தீப்பந்தங்களை.

-அகன்-


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.