வல்லினம் 25 - கோபிகை!!

 


அந்த இளங்காலைப் பொழுதில், வவுனியா, பேருந்து நிலையத்தில் நின்றனர் ஆரபியும், அண்ணன் அண்ணியும், சீராளனும்.....

பகலவன் வருகை மெல்ல தொடங்கியது. வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் பேருந்தில் ஏறிக்கொண்டனர். சனம் குறைவாக இருந்ததில் இருக்கைகள் பல இருந்தது. அங்கும் இங்கும் தலையைத்திருப்பி வேடிக்கை பார்த்தாள் ஆரபி. இப்படியான பயணங்கள் அவளுக்கு அரிதானது. அண்ணனோடு இருந்தவரை அவள் எங்கும் போகவேண்டிய தேவை இருக்கவில்லை. ஒரே ஒரு தடவை தம்பியைப் பார்க்க அண்ணனோடு  சென்றதுதான். 

மக்கள் வெள்ளம் அந்தக் காலைப்பொழுதில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. விரைந்து செல்லும் மனித முகங்களில்தான் எத்தனை அவஸ்தை. அனைவரும் ஏதோ ஒன்றுக்காய் ஓடுவதாகவே அவளுக்குத் தோன்றியது. பதினைந்து நிமிட காத்திருப்பின் பின்னர், பேருந்து புறப்பட்டது. 

'அண்ணா.....' படுக்கையில் இருந்த போர்ப்பிரியனின் கரங்களை ஆதரவாய்ப் பற்றிக்கொண்டாள் ஆரபி. அவளைப் பொறுத்தவரை போர்ப்பிரியனும் அவளுடைய அண்ணன்தான். மனதில் திரண்ட வலி, உப்பு நீராய் கண்கள் வழியே வழிந்து ஓடியது. 

குலுங்கி குலுங்கி அழுத போர்ப்பிரியனை சீராளனும் ஆரபியின் அண்ணனும் தான் ஒருவாறு தேற்றினர். அண்ணி, ஆரபியை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். ஆரபி, தன் அண்ணனுக்காய் அழுதாள், தன்னவனுக்காய் அழுதாள், தம்பியை நினைத்தும் அழுதாள். 

அத்தனை சோகங்களும் அப்போதுதான் நடந்தது போல ஒரு வலி இதயத்தைப் பிறாண்டியது. இழந்தவைகள் எல்லாம் மாறிமாறி மனத்திரையில் ஒப்பாரி பாடியது. கூடி அழுதனர் எல்லோரும்....

ஒருவாறு ஒவ்வொருத்தராக தங்களை நிதானப்படுத்திக்கொள்ள, சீராளனும் அண்ணனின் நினைப்பில் கண்கலங்கி அமர்ந்திருந்தான். அப்போதுதான் உள்ளே வந்தாள் கொற்றவை. 

"அண்ணா....." அவள் கூப்பிட்டபடி உள்ளேவர, அந்தக் குரலை அடையாளம் கண்டுகொண்ட சீராளன் அவசரமாய் நிமிர்ந்தான். 

சற்றே பெரிதாக்கப்பட்ட தாமரை மொட்டொன்று எதிரே நிற்பதைப் போல இருந்தது அவளது தோற்றம். தீட்சண்யமான விழிகள், கூர்மையான மூக்கு, முன்னால் சுருண்டு நின்று நளினம் காட்டிய முடிக்கற்றைகள் ...எல்லாவற்றையும் தாண்டி, நொடியில் மனதில் பதிந்துவிடும் மற்றவர்களிலிருந்து வேறுபட்ட தோற்றம், பாரதியின் புதுமைப் பெண்ணாய் நிமிர்ந்து நின்ற அவளுடைய ஆளுமை, என, ஒரே நிமிடத்தில் அவளைப்பற்றி, மனதில் சிலாகித்துக்கொண்டான் சீராளன். 

இன்னொன்றும் தோன்றியது அவனுக்கு, 'எப்போதோ அவளைத் தன் கையிலிருந்து தவறவிட்டுவிட்டது போல.....ஒருதவிப்பு....அவளுக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தது போல ஒரு ஏக்கம்....

அவளும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..ஒரு நொடிதான் .....சட்டென்று தலையைத் தாழ்த்திக்கொண்டாள். 

"தங்கச்சி.....இது...அவதான் ஆரபி....என் தங்கச்சி..சொன்னேனே...அது அண்ணா....அண்ணி...இவர்....சீராளனைக் காட்டி.....இந்த மொத்த குடும்பத்துக்கும்....அன்பான காவலன்....தணிகைமாறன் அண்ணான்ர தம்பி...." என்ற போர்ப்பிரியனிடம்....

'ஓ..... 'கொற்றவை பேச வார்த்தை வராது நின்றாள். பின்னர் மெல்ல கேட்டாள்,

"அப்ப, நான் யார் அண்ணா....?"

அம்மா......நொடிகூட யோசிக்காமல் அவன் சொல்லிவிட்டதில் ஆனந்த ஈரம் விழிகளில் சுரந்தது கொற்றவைக்கு. 

அதன் பிறகு, எல்லோரும் கூடியிருந்து சாப்பிட்டனர், எழுந்துகொள்ளப்போன கொற்றவையை, இழுத்து அமரவைத்தாள் ஆரபி. 

பாதருடனும் கதைத்துவிட்டு மதியம் இரண்டு மணியளவில் இவர்கள் புறப்பட ஆயத்மாக கனத்த மனதோடு விடைகொடுத்தான் போர்ப்பிரியன். 

அதுவரை நேரமும் வலுக்கட்டாயமாக சீராளனைப் பார்ப்பதை தவிர்த்துவந்த கொற்றவை, அவசரமாய் நிமிர்ந்து, போகும் நேரத்தில்தான் விலுக்கென்று பார்த்துவைத்தாள். 

'அக்கா....' மெல்ல அழைத்தவளிடம் திரும்பிய ஆரபியிடம், 'அக்கா...அண்டைக்கு ஏதோ ஒரு கோபத்தில அப்பிடி கதைச்சிட்டன், வேணும் எண்டு கதைக்கேல்ல,' என இழுக்க, 

'பரவாயில்லை...விடு....' கையைப் பற்றியபடி சொன்னாள் ஆரபி.  

இவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க, மனதில் ஒருவித சஞ்சலம் சூழ்ந்துகொண்டிருந்தது கொற்றவைக்கு.

தொடரும்.....


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.