எனக்கு யாருமே நம்பிக்கையாக இல்லையே


அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஏதோ ஒரு திட்டத்தோடு அமைதியாக இருக்க....இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலும் சசிகலாவுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் போட எடப்பாடி உத்தரவிட்டு, மெல்ல மெல்ல மாவட்ட அமைப்புகளில் தீர்மானம் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சசிகலா தன் ஆதரவாளர்கள் பலருடன் அலைபேசியில் பேசி அதை பதிவுசெய்து தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். சசிகலாவின் இன்றைய ஆடியோ என்ற அளவுக்கு நிலவரம் போய்க் கொண்டிருக்கிறது. அப்போது சசிகலாவிடம் பேசும் அவரது ஆதரவாளர்கள், ‘அம்மா நீங்கதாம்மா எடப்பாடிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தீங்க, முதலமைச்சரும் ஆக்கினீங்க. உங்களால பதவி பெற்றவங்க எல்லாம் இன்னிக்கு உங்களையே எதிர்க்குறாங்கம்மா”என்று கூறி வருகிறார்கள். சசிகலாவும் இதை ஆமாம் போட்டு ஆமோதிக்கிறார்.

ஜெயலலிதா இருந்த போதே சசிகலாதான் கட்சிப் பணிகள் எல்லாவற்றையும் செய்தார், நிர்வாகிகளை நியமித்தார் என்பது போன்ற தொனி இந்த ஆடியோ உரையாடல்களில் வெளிப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஒரு முக்கியமான தகவலை இன்று (ஜூன் 21) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். ஜெயலலிதா பெயரைத் தவிர அந்தப் பதிவில் அவர் வேறு யார் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் குறிப்பிடுவது சசிகலாவைதான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஜெயலலிதாவோடு தினந்தோறும் உரையாடும் வாய்ப்பைப் பெற்ற பூங்குன்றன் தன் பதிவில்,

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில், 2016 சட்டமன்றப் பேரவை தேர்தலுக்கான நேர்காணல் நடக்க ஆரம்பித்தது. அம்மா முதலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை நேர்காணலுக்கு வரச் சொன்னார்கள். முதல் நாள் நேர்காணலில் கன்னியாகுமரி மாவட்டத்தையே முடிக்கமுடியவில்லை. அடுத்த நாளும் தொடர்ந்தது. குறைந்த நபர்களையே அம்மாவால் பார்க்க முடிந்தது. அதற்குமேல் அவர்களால் முடியவில்லை.

சந்தேகம் வரும்போது என்னை விசாரித்துச் சொல்லச் சொன்னார்கள். இது என்ன வம்பா போச்சே! என்று நினைத்த நான் விசாரித்து இரண்டு நாள் சொன்னேன். சரியாக சொல்லவேண்டும் என்று நான் நினைத்ததால் குழப்பம் தான் ஏற்பட்டது. முடிவில் மூன்றாம் நாள் அம்மா அவர்களிடம் ஒருவர் குறித்து விசாரித்து சொன்னபோது, இல்லை இவர்தான் சரியாகத் தெரிகிறார் என்றார். உடனே இந்த அரசியலில் இருந்து தப்பிக்க நினைத்த நான், விசாரிக்கும் போது மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள். கடைசியில் நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கிறது அம்மா என்றேன். தப்பிக்க நான் நினைக்கிறேன் என்று நினைத்தாரோ என்னவோ! அம்மா சிரித்தே விட்டார்.

அம்மா அவர்கள் சிரமப்படுவதை உணர்ந்த நான், அம்மாவிடம் கண்ணீரோடு நம்பிக்கைக்கு உரிய ஒரு நிர்வாகியை வைத்து விசாரித்து செய்வது நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதற்கு அம்மா, 'நம்பி நம்பி ஏமாந்ததுதான் மிச்சம். யாருமே எனக்கு நம்பிக்கையாக இல்லையே. நான் என்ன செய்வது... எனவே, இந்த முறை நானே பார்த்துதான் முடிவெடுக்கப் போகிறேன் 'என்றார்” என குறிப்பிடுகிறார் பூங்குன்றன். அதாவது 2016 சட்டமன்றத் தேர்தலின் போதே, தனக்கு யாருமே நம்பிக்கையாக இல்லை என்பதை தன்னிடம் கூறியதாக பூங்குன்றன் பதிவு செய்திருக்கிறார். அதிமுகவின் வரலாற்றில் வலிமிகுந்த உண்மை இது.

பூங்குன்றன் மேலும் தன் பதிவில், “ஒருவர் குறித்து, நான் இவர் வெற்றிபெறுவார் என்றுச் சொன்ன போது, அவரை அம்மா அவர்கள் ஏற்கவில்லை. திறமையானவர் என்றேன். ஆனால், அம்மா அவருக்கு வாய்ப்பு வழங்க விரும்பவில்லை என்பதை உணர்ந்து அமைதியாகிப்போனேன். நான் யோசிப்பதை உணர்ந்த அம்மா, நான் தான் அறிவிக்கிறேன், நான் தான் பதவி கொடுக்கிறேன். ஆனால், என்னால் பதவி கிடைத்தவர்கள் நான் கொடுத்ததாக நினைக்கவில்லை. யாரோ ஒருவர் வாங்கி கொடுத்ததாக நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். கட்சிக்கு உதவி செய்யாமல், தனக்கு பதவி வாங்கித்தந்ததாக நினைப்பவர்களுக்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். கடைசிவரை நான்தான் பதவி வழங்கினேன் என்று அவர்கள் நினைக்காததுதான் வேதனை என்றுச் சொன்னார். அன்று நேரில் பார்த்து முடிவெடுத்ததால்தான் என்னவோ இந்த ஆட்சி இறுதிவரை நின்றது. யாரும் எந்த நிர்வாகியின் பின்னாலும் செல்லவில்லை. அது உங்களுக்கும் தெரியும்.

நான், திறமையானவர் என்று அம்மாவிடம் சொன்னவர் இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறார். அம்மா திறமைக்கு என்றுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அம்மாவை பொறுத்தவரை வெற்றி முக்கியமில்லை, ஒழுக்கமே முக்கியம். உண்மைக்கும், விசுவாசத்திற்கும், பண்புகளுக்கு மட்டுமே வாய்ப்புத் தந்தார்கள். அதிகம் படிக்காதவர்களுக்குக்கூட முக்கிய பதவி கொடுத்தது கூட விசுவாசத்திற்குத்தான், அவர்களின் உழைப்புக்குத்தான். கண்டிப்பான ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு நல்வழிகாட்டினார்.

நானும் பலமுறை நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறேன். அம்மாவால் தான் உங்களுக்கு பதவி கிடைத்தது, உங்களுக்கு பதவி கிடைத்த விதம் இப்படித்தான் என்று உண்மையைச் சொன்னால், ஓ அப்படியா! என்பார்கள். ஆனால் அதை அவர்கள் நம்புவதில்லை என்பதை சில நிகழ்வுகளின் மூலம் உணர்ந்தேன். ஒவ்வொருவர் பதவி வாங்கிய விதத்தையும் எழுதலாம் என்று மனம் நினைக்கிறது. தொண்டர்களுக்கு அப்போதுதான் அம்மாவின் பெருமை புரியும். நீங்களே கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைச் சொல்லுவார்கள். பதவி கிடைத்தவர்கள் இனியாவது அம்மா தான் எனக்கு பதவி கொடுத்து உயர்த்தினார்கள் என்றுச் சொல்லுங்கள். அம்மாவின் ஆன்மா உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் முடிவெடுக்கும் அதிகாரம் அம்மா அவர்களிடமே இருந்தது. புரிகிறதா?”என்று தன் பதிவை முடித்திருக்கிறார் பூங்குன்றன்.

அதாவது ஜெயலலிதா இருந்தபோது முடிவெடுக்கும் அதிகாரத்தில் சசிகலா இல்லை என்பதையும், அதேநேரம் பலரும் சசிகலாவால்தான் பதவி கிடைத்தது என்று சொல்வதாக ஜெயலலிதாவே வேதனைப்பட்டதையும் பதிவு செய்திருக்கிறார் பூங்குன்றன்.

மேலும், “ஒவ்வொருவர் பதவி வாங்கிய விதத்தையும் எழுதலாம் என்று மனம் நினைக்கிறது”என்று பூங்குன்றன் பதிவிட்டதைக் குறிப்பிட்டு, ‘அதை எழுதுங்கள்”என்று பலரும் பின்னூட்டம் போட்டும் அவரைத் தொடர்புகொண்டும் வற்புறுத்தி வருகிறார்கள்.

அதிமுக என்ற சாம்ராஜ்யத்தில் ஜெயலலிதா இருக்கும்போதில் இருந்தே சலசலப்புகளும் சரிவும் தொடங்கிவிட்டது என்பதையே பூங்குன்றனின் பதிவு காட்டுகிறது.

-வேந்தன்

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.