சிவா படத்துக்கு தயாரிப்பாளரை உறுதி செய்த சூர்யா

 


ரஜினி, கமல், விஜய், அஜித்துக்குப் பிறகு நல்ல திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரின் கடைசி ரிலீஸாக சுதாகொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படம் வெளியானது.

இந்தப் படம் முடித்த கையோடு இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமானார். ஒன்று, ஹரி இயக்கத்தில் அருவா, மற்றொன்று வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்'. இவ்விரு படங்களையும் விட்டுவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தை முதலில் துவங்கினார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போது, சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால், நீண்ட ஓய்வுக்குப் பிறகு, படப்பிடிப்பில் தாமதமாக கலந்துகொண்டார்.

மருத்துவரின் அறிவுரைப்படி தொற்று வந்து மூன்று மாதத்துக்குப் பிறகு தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் இருந்தார். அதன்படி, சூர்யாவும், மனைவி ஜோதிகாவும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகிவருகிறது.

தடுப்பூசியை எடுத்துக் கொண்டதால், முழு வீச்சில் ஜூலை மாதத்திலிருந்து படப்பிடிப்புக்கு தயாராகிறார் சூர்யா. முதல்கட்டமாக, பாண்டிராஜ் இயக்கிவரும் ‘சூர்யா 40’ படத்தை முடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு, தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ செப்டம்பரில் துவங்க இருக்கிறது. தற்பொழுது, சூரி, விஜய்சேதுபதி நடிக்க ‘விடுதலை’ படத்தின் பணிகளில் இருக்கிறார் வெற்றிமாறன். சூர்யா 40 படத்தை சூர்யாவும், விடுதலை படத்தை வெற்றிமாறனும் ஒரே நேரத்தில் முடித்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால், வாடிவாசல் துவங்க சரியாக இருக்கும் என்கிறார்கள்.

இந்த இரண்டுப் படங்களைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. சொல்லப் போனால், ரஜினி நடிக்க அண்ணாத்த படத்துக்கு முன்பாகவே சூர்யாவும் - சிவாவும் இணையும் படம் துவங்கியிருக்க வேண்டும். ஹரி நடுவில் வந்ததால் குழப்பமானது. அதனால், சிவாவும் ரஜினியை இயக்கச் சென்றுவிட்டார்.

தற்பொழுது, ஹரி இல்லையென்பது உறுதியாகிவிட்டது. அதனால், சிவா படத்துக்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஹரி இயக்க இருந்த அருவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. அந்தப் படத்துக்கான ஒப்பந்தத்தை சிவா படத்துக்காக வழங்கியிருக்கிறார் சூர்யா. அதன்படி, சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க இருப்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. விரைவிலேயே இந்தப் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.