கோயில் சொத்துகள்: 70% இணையத்தில் பதிவேற்றம்!

 


தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகளின் விவரங்கள் 70 சதவிகிதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட மரபுசார் மீட்புக்குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், கன்னியாகுமரி மாவட்ட கோயில்கள் 1956க்கு முன்பு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டதும் குமரி மாவட்ட கோயில்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தக் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய்த்துறை சார்பில் ஜமாபந்தி (வருவாய்த் துறையினரால் நடத்தப்படும் கணக்கெடுப்பு), நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜமாபந்திக்கு முன்பு கோயில்களின் சொத்துகளின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதை வருவாய்த்துறை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை.

எனவே நடப்பு பசலி ஆண்டின் ஜமாபந்திக்கு முன்பு கோயில்களின் சொத்துகளை வரைமுறை படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வில் நேற்று (ஜூன் 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் ஏ.கே .மாணிக்கம், "தமிழகத்தில் கோயில் சொத்துகளின் 70 சதவிகித விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பதிவேற்றம் செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மீதம் உள்ள சொத்துகளின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் முழு விபரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.

இதையடுத்து, கோயில் சொத்து விவரங்களை முழுமையாக இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், அதன் பிறகு கோயில் சொத்துகள் குறித்து போதிய விவரங்கள் இணையத்தில் இல்லாத நிலையில் அதிகாரிகளிடம் மனு கொடுக்கலாம். அந்த மனு மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.