கே.ஜி.எஃப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி!


பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் எத்தனை ஆர்வமாகக் காத்திருந்தார்களோ, அதே எதிர்பார்ப்பு கோலார் தங்க சுரங்கத்தை ராக்கி எப்படிக் கைப்பற்றினான் என்பதைத் தெரிந்துகொள்வதிலும் இருக்கிறது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்து மாபெரும் ஹிட்டான படம் 'கே.ஜி.எஃப்'. கடந்த டிம்பர் 2018இல் வெளியான இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு நிழல்கள் ரவியின் குரல் மிகப்பெரிய பலமாக அமைந்தது. கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படமும் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது.

சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்தப் படத்தில் யஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து ரிலீஸுக்கான பணிகள் நடந்து வருகின்றன. பெரும் பட்ஜெட்டில் உருவாகியிருப்பதால் நிச்சயம் திரையரங்கில்தான் படம் வெளியாகும் என்பதில் மாற்றம் இல்லை. அதற்கான வியாபாரம்கூட முடிந்துவிட்டது. தமிழில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கே.ஜி.எஃப் சேப்டர் 2 படமானது வருகிற ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் திறக்க முடியாத சூழல். அதனால், ரிலீஸ் சாத்தியமில்லை. இந்தியா முழுவதும் திரையரங்குக்கு அனுமதி கிடைத்தாலே படம் வெளியாகும். அதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த நிலையில், படத்தை செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்துவருவதால் செப்டம்பரில் எல்லா மாநிலங்களிலும் திரையரங்குக்கு அனுமதி கிடைத்துவிடும் என கணக்குப் போட்டிருக்கிறதாம் தயாரிப்புத் தரப்பு. அதனால், இப்போதைக்கு செப்டம்பரை லாக் செய்திருக்கிறார்கள்.

-ஆதினி


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.