அளவீட்டு அடையாளங்களை பிடுங்கி எறிந்த மக்கள்!!

 


மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் தனியார் மற்றும் அரச காணிகளை அளவீடு செய்யும் இராணுவத்தின் பொறியில் பிரிவின் நடவடிக்கை நேற்றும்  தொடர்ந்தது.

கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் முழுமையான அளவீடு செய்யும் பணியில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு ஈடுபட்டுள்ளது.

நேற்று முன்தினம் அளவீடு செய்யப்பட்ட தனியார் காணிகளின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, போர்க்கொடி தூக்கியதாலேயே விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

அத்துடன், நேற்று முன்தினம் அளவீடு செய்து, தனியார் காணிகளிற்குள் படை நில அளவீட்டாளர்கள் நாட்டிய கூனிக்கட்டைகளை, காணி உரிமையாளர்கள் நேற்று பிடுங்கி வீசியுள்ளனர்.

அத்துடன், தமது காணிக்குள் அத்துமீறி நுழைந்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என எச்சரித்ததையடுத்து, காணிகளிற்குள் அத்துமீறி நுழைந்தமைக்காக படைத்தரப்பு வருத்தம் கோரியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்டலாய் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பெரும் பரப்பளவில் படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 700 ஏக்கர் காணிகளை படைத்தரப்பு சுவீகரித்தது. எனினும், நல்லாட்சி அரசின் காலத்தில் அதில் 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

தற்போதுள்ள முகாமிலிருந்து தெற்கு எல்லை புல்லாவெளி வரையிலும், கிழக்கு எல்லை மண்டலாய் பிள்ளையார் கோயிலடி வரையும், வடக்கு எல்லை தரவை வரையும், மேற்கு எல்லை உடவத்தை வரையும் என காணிகளை பெற திட்டமிட்டு, நல்லாட்சியில் காணிகள் விடுவிக்கப்பட்டன.

தற்போது மேலும் 200 ஏக்கர்கள் வரையான காணிகளை பெறுவதற்காக 5 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அநத பகுதி காணி விபரங்கள் சிலவற்றை மருதங்கேணி பிரதேச செயலாளர் படைத்தரப்பிற்கு எழுத்துமூலம் வழங்கியிருந்தார். அவற்றை மீள் அளவை செய்து காணிகளை பெற படைத்தரப்பிற்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் அனுமதியளித்துள்ளார்.

தற்போது, முகாமை சுற்றிலும் 200 ஏக்கர் வரும் வரையும் தாம் அளவீடு செய்யும் நடவடிக்கையில் படைத்தரப்பு இறங்கியுள்ளது.

இராணுவ பொறியில் பிரிவின் மூலம், அளவீட்டு பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற அளவீட்டு பணி பற்றிய தகவலே முதலில் வெளியானது.

ஆனால், அதற்கு முன்பிருந்தே அளவீட்டு பணிகள் நடப்பதாக அந்த பகுதிக்கு நேற்று சென்ற காணி உரிமையாளர்கள்  தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் காணி அளவீடு சர்ச்சையானது. எனினும், நேற்றும் அந்த பகுதியில்- அரச காணிகளில்- இராணுவ பொறியில் பிரிவு அளவீட்டில் ஈடுபட்டது.

காணி உரிமையாளர்கள் பலர் பணயத்தடை காரணமாக செல்ல முடியாத நிலையில் அளவீடு நடந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் பல காணி உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

நேற்று முன்தினம் தனியார் காணிகளில் படைத்தரப்பு அத்துமீறி நுழைந்து, அளவீடு செய்து, கூனிக்கட்டைகள் பதித்திருந்தது.

நேற்று பல காணி உரிமையாளர்கள் அங்கு சென்று, தமது காணிகளில் பதித்திருந்த கூனிக்கட்டைகளை அகற்றினர். அத்துடன், காணி உரிமையாளர்களுடன், படைத்தரப்பினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

“முகாமை சுற்றிலும் 200 ஏக்கர் வரையான காணியை அளவீடு செய்யும் நடவடிக்கையை மட்டுமே செய்கிறோம். அதை சட்டரீதியான ஆவணப்படுத்தவில்லை. இந்த காணிகளை சுவீகரிக்கும் போது அதற்கான நட்டஈடு வழங்கப்படும்.

தனியார் காணிகளிற்குள் அத்துமீறி நுழைந்தது தவறுதான். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். இந்த பகுதி காணிகள் உங்களுடையவை என எமக்கு தெரியாது. நாம் அளவீடு செய்யவுள்ளதாக பிரதேச செயலாளருக்கு அறிவித்தோம்.

அவர் தந்த உரிமையாளர்கள் விபரத்தில் உங்கள் விபரங்கள் இல்லை. இது எமது தவறல்ல. பிரதேச செயலாளரின் தவறு என இராணுவத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்“ என காணி உரிமையாளர்கள் தரப்பினால்  தெரிவிக்கப்பட்டது.  

ஏற்கனவே பிரதேச செயலகம் ஊடாக காணி சுவீகரிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தை நாடி அதை ஓரளவு தடுத்து நிறுத்தியதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

“முன்னர் 700 ஏக்கர் காணி சுவீகரிப்பு முயற்சி நடந்த போது, மருதங்கேணி பிரதேச செயலாளர், எமது காணிகளில் அரச காணி என அறிவித்தல் ஒட்டி, காணிகளை பதிவு செய்ய வேண்டாமென பருத்தித்துறை காணி உத்தியோகத்தரிற்கும் அறிவித்திருந்தார்.

இதற்கு எதிராக நாம் நீதிமன்றத்தை நாடி, அந்த காணிகளை பதிவு செய்ய வழியேற்படுத்தினோம். இந்த சுவீகரிப்பு முயற்சி வெற்றியளிக்காத நிலையில், தற்போது புதிய முறையில் காணி சுவீகரிப்பிற்கு முயற்சிக்கிறார்கள்“ என தெரிவித்தனர்.

முன்னர் இருந்த பிரதேச செயலாளர்கள் காணி சுவீகரிப்பை அனுமதிக்கவில்லை. காணி சுவீகரிக்கக்கூடாது என்றே அவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

எனினும், தற்போதைய பிரதேச செயலாளரின் நடவடிக்கைக்கு எதிராக தாம் நீதிமன்றத்தை நாட வேண்டியிருப்பதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.