அகதியின் நாட்குறிப்பு 7 - குடத்தனை உதயன்!!
நடேசன் அன்றிரவு தூங்க எவ்வளவு முயற்சித்தும்.. தூக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் மனதைப் போட்டு அழித்திய வண்ணமிருந்தன. வெளிநாடு வந்து ஓரளவு கவிதா, வானதியின் நினைவுகளை மறந்திருந்தான் என்பது பொய்.. அங்கு உள்ள சூழல் தற்காலமாக அவனை மறக்க செய்துள்ளது. ஆனால்.. விதி செல்லப்பா ரூபத்தில் வெளியில் சொல்ல வேண்டியிருந்தது.
கவிதாவும், வானதியும், கொக்குவில் என்ற கிராமத்தில் பிரம்படி லேனில் ஒரு வாடகை வீட்டில் தங்கினார்கள். அந்த வீட்டின் உரிமையாளர்கள் வயது வந்த தம்பதியர். அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.
அவர்களின் வீடு மா, பலா, தென்னை எனச் சோலைகளால் நிரம்பி வழிந்தன. சூரிய ஒளி கூட அனுமதி பெற்றுத்தான் உள் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் என்றால் பாருங்கோவன். வானதியும், கவிதாவும், அவர்களை அம்மா, ஐயா, என்று முறை சொல்லி உரிமையுடன் தான் அழைப்பார்கள். கவிதா, வானதி இருவரும் சிறுவயதிலிருந்தே இணைபிரியாத் தோழிகள். அந்த உறவு நெருக்கம் இன்று வரை தொடர்கிறது.
நடேசன் கவிதாவுக்கு கடிதம் பலமுறை எழுதுவதும், வாசிப்பதும், ச்சா......ச்சா.... ச்சா.... இப்படி வரக் கூடாது.., இப்படி வந்தா நல்லாயிருக்கும், ச்சா.. கொஞ்சம் செந்தமிழ் கலந்து வசனங்களைப் போட்டாத்தான் கடிதம் வாசிக்கும் போதே அன்பு என்ற நாண் இதயச் சக்கரத்தில் எட்டியுதைத்து உறைந்து போகும்.
எனப் பலவாறாகச் சிந்தித்துத் தனது தமிழ் வித்தையை கவிதாவுக்கு எழுதும் கடிதத்தில் காட்ட முயன்று ஒருவாறு ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தான்.
கவிதாவும் நடேசருக்கு சளைத்தவளல்ல. ஆனால் என்ன.. மறை நிலாக் காலத்துப் பகலில் சந்திரன் சூரியனை மறைப்பது போன்று.. மனித வாழ்வும், இச்சையின் சகதியில் புதைந்து போவது துரதிர்ஷ்டமே....!
******************************************
அன்றிரவு வானத்தில் நிலவு காய்ந்து கொன்டிருந்தது. வானதிக்கு தூக்கம் வரவில்லை. அவளின் உடல் கிளர்ச்சியுற்று அனல் கக்கியது. மனதிலே ஒரு வித பட ....படப்பு. அருகிலே படுத்திருந்த கவிதாவைப் பார்ப்பதும் , திரும்பப் படுப்பதுமாக இருந்தாள். இந்த உடல் மாறுதல் அவளுக்கு இன்று புதிதாகத் தோன்றியதல்ல. ஆனால் இன்று அவளின் மனது, உடலின் கட்டுப்பாட்டை மீறின மித மிஞ்சிய தவிப்பு அவளுக்குள்.
ம்....ம்... என்ன தான் நடக்கிறதென்று காய்ந்து கொண்டிருந்த நிலவு நிதானமாக ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தது.
கவிதாவின் கூந்தலை முகர்ந்து பார்த்தாள் வானதி... அவளின் கூந்தலிலிருந்து எழுந்த வாசனை நாசித் துவாரத்தில் எகிறி அவள் உடலுக்குள் இறங்கியது.
கவிதா தூங்கும் போது ஒரு தனி அழகு. அவளது வளைந்த தடித்த உதடுகள் பஞ்சு போன்று மென்மையாகச் சிரிக்கும். கவிதாவின் பக்கம் சரிந்து படுத்த வானதி கையை நிமிர்த்தி தலைக்கு முண்டு கொடுத்து. அவளின் அழகை இரசித்துக் கொண்டிருந்தாள். அவள் மனது அவளுக்குள்ளேயே சிக்கித் தவித்தது.
வானதி மெதுவாக தலைக்கு முண்டு கொடுத்த கையை விலத்தி.., அவளை மெதுவாக அணைத்து கவிதாவின் கழுத்தில் வானதி தனது செவ்விதழ்களால் முத்தம் பதித்தாள். சிறிது நேரத்தின் பின்பு வானதியின் விரல்கள் தேடலில் இறங்கின.
கவிதாவில் எந்தவித அசைவோ, அதே நேரத்தில் எதிர்ப்போ அவளிடமிருந்து எழவில்லை. கவிதாவின் உடலும் கொதிநிலையில் இருந்ததை அவள் முத்தம் பதிக்கும் கணப்பொழுது உணர்ந்து கொண்டாள்.
வானதி உறங்கிக் கொண்டிருந்த கவிதாவை தன் பக்கம் இழுத்து அவளது இதழ்களைக் கவ்வும் பொழுது. ஒளிந்து கொண்டிருந்த நிலவு தனது கைகளால் கண்களைப் பொத்தியது.
இருவரும் அன்று நீண்ட நேரம் படுக்கையில் கிடந்தார்கள். வானதியின் அணைப்பில்... அன்பில் மனப்பாரம் குறைந்து உடல் அசதியாக இருந்தது. வானதி கைகளை உயர்த்தி நெட்டி முறித்து .இனிய புன்னகையுடன் கவிதாவைப் பார்த்துக் கண்ணடித்தாள்.
கவிதாவோ உன்னை என்ன பண்ணிறன் பார்.... எனத் துரத்தி அவளை அணைத்து முத்தமிட்டாள். அப்போது சூரியன் கைகளை விலத்தி, முகம் சுழித்துக் காறித் துப்பியது.
“பிள்ளைகள் ..... பிள்ளைகள்.... “
என்ன... இவ்வளவு நேரம் தூக்கம்..?
ஐயா வந்து கதவில் தட்டினார்.
இருவரும் பிரிய மனம் இன்றி பிரிந்தார்கள்.
அன்று மாலை வானதி சிவபாதம் ஐயாவுடன் சேர்ந்து மரங்களுக்கு நீர் பாய்ச்சினாள்.
“பிள்ள..”
இவங்கள் இந்தியன் ஆமியின்ர போக்கு எனக்குத் துப்பரவாப் பிடிக்கேல...
என்ர அறிவுக்கு எட்டின வரைக்கு அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத் தருமென்று நான் நினைக்கேல....”.
பாவம் பொடியல் என்ன செய்யப் போறாங்களோ .?
ஏக்கம் கலந்த குரலில் சொன்னார் சிவபாதம்.
அவரின் கவலை வானதியையும் தொற்றிக் கொண்டது.
எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றாள் வானதி.
“இந்தாங்கோ... தேத்தண்ணியைக் குடித்திட்டு வேலையைப் பாருங்கோ..”
என்றவாறு நீட்டினார் பார்வதியம்மாள்.
பார்வதி அன்று தலைக்குக் குளிச்சிட்டு முடியை அள்ளி முடிந்து கொண்டை போட்டிருந்தார். அவர்கள் இருவரிடமும் உள்ள அன்பும், காதலும், காமமும் இன்னும் குறையவில்லையென்று வானதி வந்த சில நாட்களிலே தெரிந்து கொண்டாள். அவர்களுக்குள் கூடல் நடந்தால்.. அடுத்தநாள் பாவர்வதியம்மா தலைக்குக் குளிப்பது வழமையென்பதைத் தெரிந்து கொண்டாள் வானதி.
வானதி தேநீரை எடுக்கும் போது.. பார்வதியைப் பார்த்து கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தாள்.
அடுத்தவன் படு்க்கையறையை எட்டிப் பார்ப்பது மகா தப்பு..! என்பது வானதிக்குத் தெரியாமலில்லை. மனித மனம் சில வேளைகளில் சிந்தையைச் சிதறடித்து கீழ்த்தரமான செயல்களைச் செய்ய வைக்கின்றது.
அன்றொரு நாள் இரவு வானதி வெளிக்குப் போக வேண்டியிருந்தது. சுவர்க் கரையால் பின் பக்கம் போகும் போது, அவர்களது அறையைக் கடந்து தான் போக வேண்டும். அப்படி ஒரு நாள் போகும் போது இருட்டைக் கிழித்துக் கொண்டு பாவர்தியின் சினுங்கலும், சிவபாதத்தின் கிசு... கிசுக் குரலும் வெளிவந்து இருளில் குழைந்து கொண்டன.
கண்ணியமான அன்பும், காதலும், காமமும், குடும்ப உறவின் சந்நிதி என்றே தோன்றியது வானதிக்கு. மனோதத்துவ நிபுணர்கள் கூட சொல்கிறார்கள் வயது வேறு பாடின்றி தம்பதியினர் வழமை தவறாமல் இணைந்து கொள்வார்களேயானால் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி துள்ளி விளையாடுமென்று. அந்த மகிழ்ச்சியைப் புரிதலை இவர்களில் காணலாம்.
இந்த இரண்டு வருடத்தில் அவர்கள் ஒருவரையொருவர் கடிந்து கொண்டதில்லை. கருத்து முரண் தோன்றும்.. ஆனால் ஆழமான விவாதத்தில் தெளிவான அன்பு அவர்கள் மத்தியில் தோன்றும்.
கவிதாவும், வானதியும், அடிக்கடிப் பேசிக் கொள்வார்கள் வாழ்ந்தால் இவர்கள் போன்றே வாழவேண்டும்.
நாளுக்கு நாள், வானதி, கவிதாவின் உறவு நெருக்கம் கண்டு கொண்டே போனது. நடேசனிலிருந்த காதல் சிறிது சிறிதாக விடு படுவதை கவிதா உணராமலில்லை. ஆனால் நடேசனுக்கு என்ன பதில் சொல்வது.
வானதியை அவள் வெறுக்கவுமில்லை. ஆனால் எதிர் காலத்தை நினைக்க அவளுக்குப் பயமாக இருந்தது.
காரிருளும், நிலவும், சூரியனும். காம உணர்ச்சிகளைப் பார்த்து அச்சம் கொண்டதென்றால் அது கவிதா, வானதியைப் பார்த்துத்தான்.
வானதி கடந்த கால நினைவுகளில் மிதந்து கொண்டிருக்கையில்... அவர்கள் வீட்டுப் பூனை அவள் காலை உரசும் போது திடுக்கிட்டு விழித்துக் கொண்டவள்.. திறந்த வாயை மூடாது பார்த்துக் கொண்டிருந்தாள்..!
தொடரும்.........
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை