வல்லினம் 29 - கோபிகை!!

 


நேரம் அதிகாலை 5மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. காலைச் சேவல் கூவவில்லை என்றாலும் கொற்றவையின் அலைபேசியின் அலாரம் சேவலின் ஒலியைப் போலவே ஒலித்து ஓய்ந்தது. 


போர்ப்பிரியன் அண்ணா, அதிகாலையிலேயே போகவேண்டும் எனச் சொல்லியிருந்ததால் எழுந்து தயாராக ஆயத்தமானாள். அவசரமாய் குளித்துமுடித்து அறைக்கு வந்தவள், எப்படியும் 'ஆரபி அக்கா, வீட்டில் ஒருவாராமாவது தங்கவேண்டும்' எனச் சொல்லியிருந்ததால், முதல் நாள் இராத்திரியே தந்தைக்கு  தேவையான ஒரு வாரத்திற்கான மருந்துகளை விபரமாக துண்டுப்பேப்பரில் எழுதி ஒரு தகர ரின்னில் வைத்திருந்தாள். 

அதே மாதிரி சமையல் அம்மாவிற்கும் விபரம் சொல்லி, அன்றாட மருந்துகளைக் கொடுத்தவள், குமரன் அண்ணாவிடம் கதைத்து, கேட்டுத்தான் மருந்துகளைப் போடவேண்டும் எனவும் சொல்லிவைத்தாள். ஏனையவர்களை, பாதர் தானே  பார்த்துக்கொள்வதாகச் சொல்லவும் தானும் சரியென்றுவிட்டாள். பாதருக்கு துணையாக தான் செல்வதாக, கடைசி அறையில் தங்கியிருக்கும் எழிலரசி அக்காவின் கணவரான, குமரன் அண்ணா சொன்னது அவளுக்கு மிக மகிழ்ச்சி. எழிலரசிக்கு இடுப்பு பகுதிக்கு கீழே இயக்கமில்லை, கணவரான குமரன்அண்ணாதான் அவவை பார்த்துக்கொள்வது, 


முள்ளிவாய்க்காலின் இறுதி நாளில்தான் எழிலரசி அக்கா காயப்பட்டதாக சொல்லியிருந்தா. குமரன் அண்ணா ஒரு மருத்துவ போராளி என்பதால் எப்போதுமே பாதருக்கு துணையாக தானும் செல்வார். மனைவியை எப்படி நேசத்தோடு பார்த்துக் கொள்கிறாரோ அப்படித்தான் மற்ற அனைவரிடமும் அவர் பாசம் காட்டுவார். இயலாதவர்கள்  மீது அப்படி ஒரு கருணை அவருக்கு. அவருடைய குணத்தைப் பாராட்டினால், தான் அப்படி வளர்க்கப்பட்டதாகச் சொல்லி புகழை மகாஉன்னதருக்குச் சமர்ப்பித்துவிடுவார். அன்பும் அக்கறையும் கனிவும் கருணையும் அவரிடம் ததும்பியிருக்கும் எப்போதுமே. 


எண்ணங்களை ஓடவிட்டபடி தயாராகிமுடித்தவள், தந்தையிடம் சென்று பயணம் சொல்லவிட்டு, சமையல் அம்மாவிடம் சென்றாள். இவளைக் கண்டதும் இறுக கட்டிஅணைத்த அந்த முதிய கரங்கள், இடுப்பு சேலையின் மடிப்பில் இருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து, 

"இந்தாம்மா..இதை வைச்சுக்கொள், போற வீட்டுக்கு ஏதாவது வாங்கிப்போ, தம்பிக்கும் தண்ணிவென்னி வாங்குடா" என்றதும், அதை அப்படியே திருப்பிய கொற்றவை, 


'வேண்டாம்மா, நல்ல மனசு உங்களுக்கு, என்னட்ட காசு இருக்கு' என்றாள். 

'நீ மட்டும் உழைச்சு உழைச்சு எங்களுக்காக குடுக்கலாம், நாங்கள் உனக்கு தரக்கூடாதா, அம்மா பிள்ளைக்காக குடுக்கிறதும் பிள்ளை அம்மாவுக்காக பார்த்துப் பார்த்து செய்யிறதும் ஒரு பாசப்பிணைப்புடா, இதென்ன பெரிய காசு, ஏதோ என்னால முடிஞ்சதுதான் தாய்..வாங்கிக்கொள்' என்றதும் மறுக்கமுடியாது அதை வாங்கி பையில் வைத்தாள் கொற்றவை. 

காசைக்கொடுத்த கையோடு கையில் தேநீர் கப்பையும் வைத்துவிட்டு, 'இரும்மா..தம்பியைப் பர்த்திட்டு வாறன்' என்றபடி, அவசரமாய் போர்ப்பிரியன் அண்ணாவின் அறைக்கு விரைந்தார். 


அவருக்கும் காசு கொடுப்பதற்காகத்தான் இந்த ஓட்டம் என்பது கொற்றவைக்குப் புரிந்தது. சரியாக 5.30 என்ற போது, மெல்லிய ஓசையுடன் வந்துநின்றது மகிழுந்து ஒன்று. வரவேற்பதற்காய் வெளியே வந்த பாதரிடம், வித்தகனையும், மகிழுந்தை ஓடிவந்த நண்பனையும் அறிமுகப்படுத்திய சீராளனைக் கண்டதும் இவளுக்கு அதிகாலைப் பொழுதிலும் சற்றே வியர்த்தது. நெஞ்சை வியாபித்த அந்த உணர்வை, இன்னதென்று அவளால் பிரித்தறிய முடியவில்லை, பிரித்தறியவும் அவள் விரும்பவில்லை.  


தொடரும்.....கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.