அகதியின் நாட்குறிப்பு 6 - குடத்தனை உதயன்!!

 


நடேசன் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப்பீட இறுதியாண்டு மாணவனாக இருந்த காலமது. குண்டுச் சத்தம் கேட்டாலும் துயர் நிகழ்வுகள் மனதை அழுத்தினாலும். அது உண்மையில் ஒரு மறக்க முடியாத காலம்.

இதுவும் கடந்து போகும் என்பது போன்று வாழ்க்கை நகர்ந்து சென்றது.

   நடேசன் எமது விடுதலைப் போராட்டத்தின் அதி தீவிரமான செயற்பாட்டாளன், எல்லோரிடமும் மிகவும் அன்பாகப் பழகுவான், ஆதலால் மற்றைய மாணவர்கள் இவனில் நல் மதிப்பு வைத்திருந்தார்கள் .

    போராட்டத்திற்கும் , இயக்கத்திற்கும் விசுவாசமானவன் என்ற ஒரே காரணத்திற்காகக் காட்டிக் கொடுப்பும், பழிவாங்கும் நோக்கமும், மாற்றுக் குழுக்கள் வீடு தேடி வரவும், ஒரு இக்கட்டான சூழலில் இங்கு வர வேண்டியாதாய்ப் போயிற்று.

******************************************

    ஒரு ஐப்பசி மாதம் நடுப்பகுதியில் வானம் இருள் கவிழ்ந்து மேகத் திரள்கள் சூழ்ந்து கொண்டன. சக்களத்தி மடியை அவிழ்த்து விட்டது போன்று மழை ஸ்....   ஸ்.... ஸ்.... ஸ். ....., டிக்.... டிக்... டிக்... எனப் பல விதமான ஒலிகளை ஒன்று சேர எழுப்பி, மரக்கிளைகளில் பட்டுத்தெறித்த மழைத்துளிகள் ஒரு வித முனகலும், ஓட்டில் விழுந்தெழும்பும் மழைத் துளிகள் ஒரு வித புலம்பலுடன் நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தன.

      “எனக்கு நல்ல ஞாபகம் அந்த இறுதியாண்டு.”  மனதில் ஊசி தைத்த மாதிரியிருக்கு. சில ஞாபகங்கள் மனதைக் கடந்து போகும் , ஆனால் சில சம்பவங்கள் நாங்கள் சாகும் போது தான் அதுவும் எங்களுடன் சேர்ந்து செத்துப்போகும்.”

நீண்டதொரு பெருமூச்சு நடேசனுக்குள்ளிருந்து வெளியில் சிதறுண்டன.

      ஐப்பசி மாதத்தில் பல நல்ல விடயங்கள் நடைபெறும் என்று கேள்வி..! உண்மையோ , பொய்யோ அவன் அறியான். ஆனால் மாமிசத்தைத் தள்ளி வைத்து மனிதன் மனதை ஒரு நிலைப்படுத்தி விரதங்கள் பிடிக்கும் மாதம்.        

 மழையைக் கண்டு பல மாணவர்கள் முட்டி மோதி முன் மண்டபத்துக்குள் ஒதுங்கிக் கொள்ள , சிலர் ஒரு குடைக்குள் ஒருவர், இருவரெனப் பல வர்ணக் குடைகள் ஒன்று சேர மழை நீரும் அதில் பட்டுத்தெறிக்க அப்ப... ப்... பா ..  அந்தக் காட்சி பல நட்சத்திரங்கள் வரிசைகட்டி பூமிக்கும் ஆகாயத்திற்குமிடையில் அன்ன நடை போடுவது போன்று நடேசன் மனதில் பல நினைவுகளை உண்டாக்கியது.

      மழையைக் கண்டால் அவன் மனதில் ஓடி வந்து நிற்பவள் சாரதா ரீச்சர் தான். நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் மழைக் காட்சியைப் பற்றி கட்டுரை எழுதக் கொடுத்த போது . பந்தி தொடங்கும் போது மழையெனத் தொடங்கி குடையென முடித்திருந்தான். அக்கட்டுரையில் எல்லாப் பந்திகளும் அப்படித்தான் முற்றுப் பெற்றிருந்தன.

“நடேசன்.” ....

இங்க வா...!

“உன்னை... மழைக் காட்சியைப் பற்றி எழுதச் சொன்னால்.....

நீ... !

குடைக் காட்சியைப்பற்றி எழுதியுள்ளாய்...

என்று கேட்டார் சாரதா ரீச்சர்.

வகுப்பில் பட்டாசு வெடித்தது  போன்று சிரிப்பொலி எழுந்தன.

       நடேசனை ஒரு வித வெட்கம் ஆட்கொண்டாலும், சாரதா ரீச்சரின் நளினமான பேச்சு, புரிந்து கொள்ளக் கற்பித்தல், மாணவர்களில் அதிக அக்கறை காட்டுதல், சாறி கட்டும் அழகு, எல்லாமே அவனைக் கவர்ந்தன. மொத்தத்தில் சாரதா ரீச்சரையே அவனுக்குப் பிடித்திருந்தது.

ச்...சா...

நீங்கள் என்ன மனதில் நினைக்கிறீர்கள் என்பது புரியுது.

ஆனால் குருவுக்கும் சீடனுக்குமுண்டான அன்பின் பிடிப்பு அவனுக்கு சாரதா ரீச்சரிடம். அவன் ஒரு நல்ல நிலைக்கு வர, அறிவை வளர்த்துக் கொள்ள, சாரதா ரீச்சரும் காரணம்.

      மழைக்காலத்தில் மனிதனுக்கு மனதிலும், உடலிலும், பல வகை மாறுதல்களும் எதிர்மறையான எண்ணங்களும் பஞ்சமின்றி உருண்டு விளையாடும். அப்படியான சந்தர்ப்பங்களில் பல நன்மைகளும் , தீமைகளும் ஏற்புட்டுள்ளன என்பது தான் உண்மை.

    அன்று நடேசனின் மனதிலும், உடலிலும் ஒரு வித கிளர்ச்சி ஏற்பட்டன. இதயத்தில் சூடும், வெளித்தசைகளில் குளிர்மையையும் உணர்த்திற்று. மழைக்கு ஒதுங்கும் கோழி போன்று அவனது இதயமும் குளிர் காய ஒதுங்கத் துடித்தது.

     பாயிலே வளர்த்திய சிறு குழந்தை ஒன்று மழைச் சாரலைக் கேட்டுக் கையைக் காலைத் தூக்கிப் போட்டு... அடித்தும், சிரித்தும், குதுகலிக்குமே... அதே மனநிலையில்  பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான் நடேசன்.

சற்றுத் தள்ளி நின்ற கவிதா அவனையே பாத்துக் கொண்டிருந்தாள்.

.”அ...  ட ..டா...

மழையை இப்படியும் இரசிக்க முடியுமா... என்ன.....?”

“என்னைக் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக அப்படி மழையை பார்த்துக் கொண்டு நிக்கிறானா..?”

அல்லது உண்மையில் மழையின் இரசிகனா.. ?

அவள் மனது கறையான் புற்றெடுப்பது போன்று குடைந்து கொண்டிருந்தது. அருகில் நின்ற வானதி , கவிதாவைத் தட்டி...,

யே....ய்...

உன்ர ஆளுக்கு பழைய நினைவு வந்திட்டுது போல.

கவிதா அவள் கையில் “நுள்ளி” சத்தம் போடாதை என எச்சரித்தாள்.”

    காதல் பல விதம். காதலிப்பவர்கள் பல ரகம். உலகமே உருண்டு பிரண்டு காதலித்துக் கொண்டிருக்கின்றன. சில காதல் நீங்கா நினைவுடன் போகும். சில காதல் வார்த்தைகளுடன் நிண்டு போகும். அதிலும் சில காதல் உடல் பிசைவுடன் ஓடிப் போய் விடும். ஒரு சில காதல் தான் தெளிந்த நீரோடை போன்று சாகா வரம் பெற்று நிற்கும்.

   கவிதா நடேசனை முதன் முதல் சந்தித்தது..,  அனேகமாக எவரும் விரும்பாத ராக்கிங் , அல்லது படித்த முட்டாள்களின் தெருக்கூத்து என்று தான் சொல்வேன்.

அந்த நாட்களில் இயக்கத்தால் முட்டாள்களின் தெருக்கூத்து கட்டுப்படுத்தியிருந்த காலம். இருந்தாலும் இடையிடையே ஓரிரு சம்பவங்கள் நடக்கும்.

     அப்படித்தான் இவர்கள் வந்த புதிசில் இருவரையும் சேலைத் தலப்பை எடுத்து தலைக்கு மொட்டாக்கு போடச் சொல்லியும், எழுதும் “நோட்புக்கை “தலையில் வைத்து. இருவரும் வலது கையுக்குள் இடது கையைச் சேர்த்து, இரு பாதணிகளை இரு கைகளிலும் போட்டுக் கொண்டு நடக்க வேண்டும். “நோட்புக்” விழுந்தால்.. விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.

    இந்த முட்டாள் கூத்து எத்தனை மணி நேரம் நடக்கிறதோ  நடேசன் அறியான். அவன் ஏதோ அவசர அலுவா வெளியில் போய்க் கொண்டிருக்கும் போது, இது நடை பெற்றுக் கொண்டிருந்து. நடேசனைக் கண்டதும் கேலி செய்த மாணவர்கள் பின்னகர்ந்தார்கள்.

  வானதி, கவிதா இருவர் கண்களும் பயத்தில் நடுங்கின. கேலி செய்த மாணவர்களை அருகில் கூப்பிட்டு..,  

“ ஏன்ரா திரும்பத், திரும்ப…, ?

எனத் திட்டியவாறு..,  நடேசன் நகர்ந்து விட்டான் “

அவர்களும் “சரி... சரி ... போகலாம் .

“நடேசர் வந்த படியால் தப்பீட்டியள். “

அவனின் பெயர் மட்டும் இவர்கள் காதில் பதிவாகியிருந்தது. ஆனால் உருவம் .... அவ்வளவாகப் பதியவில்லை, கவிதா சொன்னாள்...

“அடியே அவர் நல்லவர் போல இருக்கிறார்.

அவர் வந்தபடியால் தப்பிச்சம்.

சும்மா எடுத்வுடன் எல்லாரையும் நம்பாத..

இது “செற்ரப் ராக்கிங்”காக்கூட இருக்கலாம்...

என்றாள் வானதி.

உனக்கு எதிலும் சந்தேகம் தான்...

கவிதா சொன்னாள்.”

எது எப்படியோ தப்பித்தோம்..! என்ற மன நிம்மதி இருவருக்கும்.

பழைய நினைவுகளில் கவிதா நினைவிழந்து நிற்கையில்...,

பின்னாலிருந்து வந்த சிரிப்பு சத்தம் கேட்டு நடேசன் திரும்பிப் பார்த்தான்.

அட இவர்கள் எப்ப வந்தார்கள்..?

என்ற கேள்வியுடன்...  

அவர்கள் வந்ததையே கவனிக்க வில்லையே.. என்ற ஒருவித மனக் கூச்சத்துடன் அவர்களைப் பார்த்தான் நடேசன்.

“அண்ணா”......

என்ன நாங்கள் வந்தது தெரியாமல் மழையைப் பார்த்து அவ்வளவு பலத்த யோசனை.. ?

மழைநேரத்துப் பல நீங்கா நினைவுகள் மனதில் இருக்குப் போல..? என வானதி கேட்டாள்.

       நடேசனின் பார்வை கவிதாவில் மோதி , வானதியில் நிலை குத்தி நின்றன. கவிதாவுக்குள் ஒரு வித பட... பட... ப்பு... உந்த லூசின் கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லப் போறானோ.?

“நடேசன்” தனது பார்வையைச் சுழல விட்டவாறு...,

“ச்சா... ச்சா...

அப்படி ஒரு நினைவும் இல்லை..

“மழையைப் பொறுமையாக இரசிப்பதற்கு இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.” எனப் புன்னகைத்தான்.

அவனின் பார்வை கவிதாவின் பக்கம் திரும்பியது.

  அவனையே பாத்துக் கொண்டிருந்த கவிதா, திடீரென அவனது பார்வை அவளது கண்களில் நிலை குத்தி நிற்க..., அதை எள்ளவும் எதிர் பாராத அவள்... எரியும் நெருப்பில் தடுமாறி கை விரல்களை விட்டது போன்று தனது பார்வையை விலத்திக் கொண்டாள்.   

 நடேசனின் பார்வையில் ஒருகனிவு இருப்பதை கவிதா உணர்ந்து கொண்டாள். வானதியும் அதைப் புரிந்து கொண்டாள்.  

     இதில் என்ன வேடிக்கையென்றால்.. வானதியும் நடேசனை மனதிற்குள் விரும்பினாள். ஆனால் கவிதா அவளது விருப்பத்தை வெளிப்படுத்தியதும்.., தனது விருப்பத்தை மிகவும் சிரமப்பட்டு மறைக்க வேண்டியதாய்ப் போயிற்று.

ஆனால் நடேசனின் மனதில் என்ன இருக்குமென்பது அவனுக்குத்தான் வெளிச்சம்.

    கவிதாவையும், வானதியையும் பல்கலைக்கழகத்தில் இரட்டயர் என்றுதான் பகிடி பண்ணுவார்கள்.

அதைவிட சிலர்.. ஒரு படி மேலே போய் அவளுகள் “லெஸ்பியன்” என்பார்கள். காரணம்.. காலுக்குப் போடும் செருப்புத் தொடக்கம் தலைக்குக் கட்டும் ரிபன் வரை ஒரே மாதிரித்தான் போடுவார்கள்.

“செல்லப்பா”.. நடேசரை ஒரு ஓரப் பார்வை பார்த்து...

“ நீ.. கண்டதைச் சொல்கிறாய்...”

என மீசையை ஒரு முறுக்கு முறுக்கிச் சிரித்தார்.

சில பேரின் ஓரிரு வார்த்தைகள்.., அதனூடாகப் புலப்படும் உதிர்ந்த புன்னகை, கதை சொல்லி அருகிலிருப்பவரையும் சிரிக்க வைத்து அதே சமயத்தில் சிந்திக்கவும் தூண்டும்.

“அண்ண...”

இப்படிப் பல லூசுகள் அங்க இருக்குங்கள்.

மிச்சத்த நாளைக்குச் சொல்கிறன் இப்ப பசிக்கிது சாப்பிடுவமே..? என்றான் நடேசன்.தொடரும்....


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.