ஒன்றிய அரசுக்கு உத்தரவு!

 


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது குறைந்து வரும் கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் இதுவரை 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் கடந்தமுறை விசாரணையின்போது ஒன்றிய அரசு 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், “ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ செலவு, குறைந்த வரி வருவாய் ஆகியவற்றால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கிற சூழ்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்குவது என்பது இயலாத ஒன்று. இழப்பீடு வழங்குவதன் மூலம் ஏற்படும் கூடுதல் நிதி சுமையால் சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி குறையும். இதனால், கொரோனாவின் அடுத்த அலை, எதிர்காலத்தில் வரும் புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்” என தெரிவித்தது.

மீண்டும் இந்த வழக்கு இன்று(ஜூன் 30) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது வழங்குவது கட்டாயம். இழப்பீடு கொடுக்க வேண்டிய கட்டாயமும், கடமையும் ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஆனால், எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டுமென்று நாங்கள் உத்தரவிட முடியாது. நியாயமான முறையில் இழப்பீடு எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம்” என்று உத்தரவிட்டனர்.

”இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆறு வாரங்களுக்குள் வகுத்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழ் முறையை எளிமையாக்க வேண்டும். இறப்பு சான்றிதழ்களில் சம்பந்தப்பட்டவர் இறந்த தேதி மற்றும் இறப்புக்கான காரணம் தெளிவாக இடம்பெற வேண்டும்” என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர் .

-வினிதா


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.