டிஜிபியாக பொறுப்பேற்றார் சைலேந்திரபாபு

 


தமிழகத்தின் 30ஆவது டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று (ஜூன் 30) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலை 11.30 மணியளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில், அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் டிஜிபி திரிபாதி பொறுப்பை ஒப்படைத்தார். சைலேந்திரபாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முன்னாள் டிஜிபி திரிபாதி.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவியை காரில் அமர வைத்து காவல்துறை அதிகாரிகள் காரை தேர் போல் கயிறு கட்டி இழுத்து

காருக்கு முன்பாக மலர்களைத் தூவி பாரம்பரிய முறைப்படி காவல்துறை மரியாதையுடன் வழி அனுப்பி வைத்தனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய டிஜிபி, “தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணி காக்க முன்னுரிமை கொடுக்கப்படும். மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக காவல்துறையினருக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.

காவல் துறையின் தலைமை பொறுப்பை வகிப்பது என்பது அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி” என்று கூறினார்

-பிரியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.