பாரிசில் ஈழத்தமிழ் பெண்ணின் வியத்தகு விஞ்ஞான மருத்துவ சாதனை!


பிரான்சு நாட்டின் பாரிசில் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண்ணின் வியத்தகு விஞ்ஞான மருத்துவ சாதனை -Paris-Saclay பல்கலைக் கழகப் பட்டதாரி (master-2017) France வேதியல் சங்கமும் (SCF) மற்றும் France இயற்பியல் சங்கமும் (SFP) இணைந்த division Chimie-Physique என்ற அமைப்பும் ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆய்வுக்கான விருதினை வழங்கி அந்த ஆய்வாளரை மதிப்பளிப்பது வழமையானதோர் மிகப்பெரிய விடயமாகும்.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான விருது, ஈழத்தமிழ் பெண் செல்வி சுவஸ்திகா இந்திரஜித் அவர்களுக்குக் கிடைத்துள்ளமையானது புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கும், பிரான்சுவாழ் ஈழத்தமிழருக்கும்,அடுத்த தலைமுறைக்கும் மிகுந்த பெருமையையும், மகிழ்வையும் நற் பெயரையும் பெற்றுத்தந்துள்ளது. - - Caen Normandie பல்கலைக் கழகத்தில் வேதியல் பிரிவில் முனைவர் ஆய்வு (2020) நடைபெற்றிருந்தது. இதில் “அயண்களும் இலத்திரன்களும் மோதுவதால் ஏற்படும் கலங்களில் உருவாகும் நேரியல் ஐய்திரோகார்பன் கொத்துகளின் மூலக்கூறு வளர்ச்சி ” என்ற ஆய்வை, சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தமகள் இரவு பகலாக மேற்கொண்டிருந்தார். அதன் பயனாக அதில் வெற்றியும் கண்டதுடன் பிரான்சு நாட்டினதும் அனைத்து ஆய்வாளர்களினதும் பாராட்டையும் பெற்றிருக்கின்றார். 

இதன் தொடர்ச்சியாக தற்பொழுது சுவீடன் நாட்டில் Stockholm பல்கலைக் கழகத்தில் உதவி விஞ்ஞானியாக பணி புரியவும் ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 இவரின் கண்டுபிடிப்புக்கான விருது விழா, பலநூறு விஞ்ஞான ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்தியில் புரட்டாதி (September )மாதத்தில் நடைபெறம் என அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 


இவர் இந்தச் சாதனை மட்டுமல்லாது, பிரான்சில் தமிழ்ச்சோலையில் 12 ஆம் ஆண்டு தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்துள்ளதுடன், அவ்வப்போது தான் வாழும் பிரதேசத்தில் உள்ள தமிழ்ச்சோலையில் தமிழ் ஆசியரியராகவும் பணியாற்றியவர். மட்டுமல்லாது தொடர்ந்தும் தமிழ்ச்சோலைத்தலைமைப் பணியகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் தமிழ்மொழியில் மேற்படிப்பை மேற்கொண்டு இளங்கலைத் தமிழியல் பட்டப்படிப்பையும் முடித்து 2018 ல் பட்டம் சூடிக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .


 தமிழர்களின் பாரம்பரிய வழிமுறைகளில் பெற்றோரால் வளர்க்கப்பட்டும், வாழ்ந்தும் வருகின்ற நம் அழகிய தமிழ்மகள் செல்வி சுவஸ்திகா இந்திரஜித், பரதநாட்டிய நடனத்தையும் முறையாக கற்றுக்கொண்டு ஏராளமான நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வருபவர். கல்வியே தமிழர்களின் மூலதனம் என்பதற்கமைவாகவும் தன் தாய் மொழியையும் விட்டுவிடாது, தன்வாழ்விட மொழியையும், வாழ்வையும்; வளர்ச்சிப்பாதையில் இட்டுச்சென்று,தன் தாய்மொழி மற்றும் கலைகளோடு, வாழ்விடத்திலும் பெரு வெற்றி கண்டுநிற்கும் சாதனைப்பெண். 


வாழ்விட மொழியோடு; தாய்மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்ற நம் தமிழினத்தின் ஆழ்ந்த அவாவினையும் ஏக்கத்தையும் புரிந்து கொண்டு செயற்படுத்தி இன்று வென்று நிற்கும் நம் தமிழ் மகளைப்பாராட்டி வாழ்த்துகின்றோம். 


 பல பெற்றோர், பிள்ளைக்குக்கடினம் என்று சாக்குப்போக்குச் சொல்லி தமிழ் மொழியைப் புறந்தள்ளி பயணித்துவரும் நிலையில், தன் மொழியையும் இணையாகக் கற்றபடியே பல வெற்றிகள் காணலாம் என்பதை, எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டி செல்வி. சுவஸ்திக்கா இந்திரஜித் நிரூபித்திருக்கின்றார். இந்தச் சாதனைக்குப்பின்னால் இவரின் பெற்றோர், மிகப்பெரும் பங்காற்றியும், பலமாகவும் இருந்திருக்கின்றனர். 


அவர்களுக்கும் நன்றிகளோடு வாழ்த்துகள். தமது பிள்ளைகளை மொழியோடும், பண்பாடு, கலாசார விழுமியங்களுடனும் வளர்த்தெடுத்தமை மட்டுமன்றி தமது பிறந்த மண்ணின் (புங்குடுதீவு ) பெருமையையும்,தம்மினத்தின் சிறப்புப் பற்றியும் சிறு வயதிலிருந்தே அறியத்தந்து அவ்வப்போது தாய் மண்ணுக்கும் பிள்ளைகளை அழைத்துச்சென்று ஆழமாய் இன உணர்வைப் பிள்ளைகளின் மனதில் ஊட்டி வளர்த்தவர்கள் இவரின் பெற்றோர். இவை தான், பொட்டு வைத்த, சேலைகட்டிய இப்பெண்ணை சாதனைப்பெண்ணாக மாற்றியதோ  என்று எண்ணத்தோன்றுகின்றது.


 “ குயிலின் குரலுக்கு ஈடுஇணையில்லை ஆனால் அந்த குயிலுக்கு ஒரு கூடு இல்லை’’ என்றாலும் ஒருநாள் இவர்போன்று உலகில் உருவாகிவரும் எம் இனத்தின் தலைமுறைகள் ஒரு கூட்டினைக்கட்டி கூட்டமாய்ச் சுதந்திரமாய் வாழவழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் புரட்டாதி மாதம் செல்வி. சுவஸ்திகா இந்திரஜித் அவர்களின் கண்டுபிடிப்புக்காக நடைபெறவிருக்கும் விருதுப்பட்டமளிப்பிற்கு எமது வாழ்த்துகளை ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.