இதயம் ரணமாகிறது!!

கருப்பு ஜூலை இது

வெறுப்பின் ஜூலை.

பெரும்பான்மை இனத்தால்

சிறுபான்மை இனத்தை

சீரழித்து சிதைத்து

சின்னாபின்னமாக்கிய ஜூலை.


இன அழிப்பின் உச்சமாய்

கன உயிரை துச்சமாய் மதித்து

கட்டவிழ்த்து விடப்பட்ட

திட்டமிட்ட படுகொலை இது.

அப்பாவிகள் மீது அரங்கேற்றப்பட்ட அராஜகம் இது.


வேலியே பயிரை மேய்ந்தாற் போல

காப்பாற்ற வேண்டியவர்களே

கலகங்களுக்கு காவலாய் -பலர்

கதிகலங்கி போவதற்கு ‌

காரணமாய்ப்போன கொடுமைஇது


காலங்கள் பல கடந்தும்

காயங்கள் இன்னும் ஆறவில்லை.

காரணம் ஆனவர்களின்

கயமைகள் இன்னும் ஓயவில்லை. நலிந்த எம் மக்கள் வாழ்வு

வலிகள் இன்னும் தீரவில்லை.


இறந்தவர்களுக்கு நீதி இல்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு 

பதில் இன்னும் கிடைக்கவில்லை.

கருத்துரிமை  காணாமல்போனது.

சொந்த நாடே எதிரி  ஆனது.

சென்ற நாடே அடைக்கலமானது.


முதல் தோன்றிய மூத்த இனம்

புகழ் குன்றிய குற்றுயிராகிறது...

படகோட்டிய தமிழன் இன்று

கடல்கடந்தும்  வாழ்கின்றான்

எங்கும்....

காட்டிக்கொடுப்புகள் தீரவில்லை

துரோகங்களும் ஒழியவில்லை.


இனவெறி சிங்களத்தின் சதியால்

பிணமான தமிழ் மக்கள் எத்தனை?

வருடங்கள் பல கடந்தும்

வதைகள் இன்னும் நீங்காமலே..

வாழ்வு இழந்த மக்களின்

வாழ்வாதாரம் இன்றும் கேள்வியாய்......?


எதைமறப்போம் எப்படி மறப்போம்

பதைபதைத்த எம்மினத்தின்

பயமதை எப்படி நீக்குவோம்..?

பார் போற்ற வாழ்ந்த எங்கள்

பண்டாரவன்னியனின் பரம்பரையை...

தலைகுனியச் செய்தவனை 

நிலைகுலையச் செய்வது எப்படி?


நாம் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடிய  அன்னைமண்ணில்

ஆதரவாய் அன்போடு ஆனந்தமாய் வாழ்வது எப்போ..?

அந்நிய நாட்டில் அவதியாய்

அகதி வாழ்வு முடிவது எப்போ...?


கண்கள் குளமாகிறது

இதயம் ரணமாகிறது

வாழ்வு  வெறுப்பாகிறது

வாழ்க்கை கசப்பாகிறது


மாவீரம்  வீர உரமாகும்

தமிழீழம் நமது நனவாகும்


கொள்கையில் ஒன்றாகி

சிதைவின்றி ஒருமித்து

ஒன்றிணைவோம்....

முடிந்தான் தமிழன் என்ற

முட்டாள் சிங்களத்தின் முகத்தில்

முனைப்போடு  தாக்குவோம்...


தாகங்கள் என்றும் குறையாது

வேகங்கள் என்றும் தீராது 

வேங்கைகள் வீரம் வீழாது....


அருந்தமிழ்

23/07/2021.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.