தமிழ் பெண் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பு!


 பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பெண் தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. பணிப்பாளர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருக்கு இது குறித்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனையை சேர்ந்த, 36 வயதான கருப்பையா செல்வகாந்தி எனும் பெண், சட்டத்தரணி எம்.ஏ. மதீன் ஊடாக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்தே, இந்த அறிவித்தலை பிறப்பித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் மேற்படி அதிகாரிகளுக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் உள்ள தனது கணவரை பார்க்கச் செல்லும் நோக்கில், முகவர் ஒருவரிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க சென்ற இடத்தில், சி.ஐ.டி. என கூறிக்கொண்டோரால் கைது செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களாக காரணங்கள் எவையும் வெளிப்படுத்தப்படாது தமிழ் பெண் ஒருவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கைது மற்றும் தடுத்து வைப்பு ஆகியன சட்ட விரோதமானது என தெரிவித்து சட்டத்தரணி மதீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவானது, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் பாரூக் ஆஜராகி விடயங்களை முன்வைத்தார். கடந்த ஜனவரி 28ம் திகதி, மனுதாரரான பெண்ணை, சி.ஐ.டி. எனக் கூறிக்கொண்ட குழுவினர் மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கான காரணத்தை அப்போது வெளிப்படுத்தியிராத நிலையில், அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான தெளிவான தடுப்புக் காவல் உத்தரவை முன்வைக்கவும் விசாரணை அதிகாரிகள் தவரியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் பாரூக் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் அவரை தற்போது தங்காலையில் உள்ள தடுப்பு மையத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ( சி.ரி.ஐ.டி.) தடுத்து வைத்துள்ளதாகவும், அவரை சந்தித்து ஆலோசனை பெற சட்டத்தரணிகளுக்கு கூட அவகாசம் வழங்கப்படாமல் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் பாரூக் குறிப்பிட்டார்.

இதனைவிட, குறித்த பெண் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைக்கமைய இருக்க வேண்டியவர் என குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் பாரூக், அது தொடர்பிலான மருத்துவ சான்றிதழ்களையும் மன்றுக்கு சமர்ப்பித்து அவர் உரிய மருத்துவ வசதிகள் கூட இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தினார்.

அதனைவிட தான் எதற்கு கைது செய்யப்பட்டேன் என அறியும் உரிமை அப்பெண்ணுக்கும், கைதுக்கான காரணத்தை அறியும் உரிமை குடும்பத்தாருக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, சட்டத்தரணியை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கான உரிமையும் குறித்த பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தனது கணவரை பார்க்கச் செல்ல தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க சென்ற இடத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரின் கைதும், தடுத்து வைப்பும் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்து, அவரை உரிய நீதிமன்றம் ஒன்றின் முன் ஆஜர் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

இந்நிலையிலேயே மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், சி.ஐ.டி. எனும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், அப்பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு மன்றில் ஆஜராகி எதிர்வரும் 9ம் திகதி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.