வசமாக சிக்கிய மோசடி முகவர்கள்!

 


யாழ் மாவட்டம் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற இளைஞர்களை ஏமாற்றிய முகவர்களை , சாவகச்சேரி இளைஞர்கள் பொறி வைத்து பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தில், கொழும்பிலிருந்து வந்த முகவர்கள் உள்ளிட்ட மூவரை, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தடுத்து வைத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற போது, இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஆட்களை அனுப்பும் முகவர்கள் மூவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் விடுதி நடத்தும் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மோசடியாளர்களிடம் தென்மராட்சி பிரதேசத்தில் மட்டும் 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மோசடியாளர்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 1 இலட்சம் ரூபாவை முதலில் பெற்றுள்ளனர். வெளிநாட்டுக்கு செல்ல முயல்பவர்களிடம், பணத்தை வங்கி மூலம் அல்லாமல் நேரடியாகபெறும் அவர்கள், தமது வாகனத்தில் வீடுகளிற்கு நேரில் சென்று பணத்தை பெற்று, வெளிநாடு செல்லவுள்ளவரையும் ஏற்றிச் சென்று விடுவார்கள்.

அதன் பின்னர் அவர்களை கொழும்பிலுள்ள தமது விடுதியில் சுமார் இரண்டு மாதங்கள் தங்க வைத்திருப்பார்கள். இதற்கான செலவையும் குறிப்பிட்ட இளைஞன் செலுத்த வேண்டும். ஆனால் இந்த காலப்பகுதியில் அவர்கள் விடுதியிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்னர் அவர் ருமேனியாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர் முகவர்கள் தொடர்பை துண்டித்து விடுவார்கள். அதன் பின்னர் அங்கிருந்து இளைஞர்கள் நாடு கடத்தப்படுவார்வாகள் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சாவகச்சேரியை அண்மித்த பகுதியிலுள்ள இளைஞன் ஒருவர் உணவகம் நடத்தி வந்த நிலையில் வெளிநாடு செல்ல முயன்றார். இதர்காக கொழும்பை சேர்ந்த அந்த இரண்டு முகவர்களிடமும் அவர் சுமார் 6 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்துள்ளார். எனினும், பணத்தை நேரடியாக கொடுத்ததால் அவரிடம் ஆவணங்கள் இருக்கவில்லை.

எனினும், முன்னெசரிக்கையாக இளைஞர் தொலைபேசி உரையாடல் பதிவுகளை வைத்திருந்தார். இந்த நிலையில் வெளிநாடு செல்ல முயன்ற அந்த இளைஞர் , ருமேனியாவுடன் அந்த இளைஞனும் திரும்பி வந்தார். எனினும் தாம் வாங்கிய பணத்தை முகவர்கள் திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டனர். ஓரிரு தினங்களின் முன்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளைஞன், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய முயன்ற போதும், போதிய ஆதாரங்களில்லாததால் முறைப்பாட்டை பொலிசார் பெற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.

இதையடுத்து, இரண்டு மோசடி பேர் வழிகளையும் பொறி வைத்து பிடிக்க அந்த இளைஞன் திட்டமிட்டார். இதேவேளை கொழும்பு முகவர்களிற்கு முகவராக வரணியை சேர்ந்த முதியவர் ஒருவர் செயற்பட்டுள்ளார். தென்மராட்சியில் 5 இளைஞர்கள் வெளிநாடு செல்லவிரும்புவதாக அந்த முதியவரை இளைஞர்கள் அணுகியுள்ளனர்.

வரணி முதியவர், கொழும்பு முகவர்களிற்கு தகவல் கொடுக்க “அப்படியா… நல்லது டிரெக்டாக பிரான்ஸ் அனுப்பி வைக்கலாம்“ என உற்சாகமாக வாக்களித்து, பிரான்ஸ் செல்ல தயாராக இருக்குமாறும், நேற்று   மாலை 6 மணிக்கு ஏற்ற வருவதாகவும் கொழும்பு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு கொழும்பு முகவர்கள் தமது வாகனத்தில் வந்தபோது அவர்களுடன் வரணி முகவரும் இருந்துள்ளார். இதனையடுத்து இளைஞன் ஒருவர் வாகனத்தில் ஏறி, மற்றொருவரை ஏற்றுவதாக கூறி, வரணியில் ஆட்களற்ற வீடொன்றிற்கு அழைத்து சென்றார். அங்கு இன்னொரு ஒரு இலட்சம் ரூபா மாட்டிய சந்தோசத்தில் சென்ற முகவர்களை அங்கிருந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்து வீட்டில் தடுத்து வைத்தனர்.

தன்னிடம் பெற்ற 6 இலட்சம் ரூபா பணத்தை மீள ஒப்படைக்குமாறு பாதிக்கப்பட்ட இளைஞன் கேட்டபோது முகவர் பணமில்லையென கூற, 3 இலட்சம் ரூபா பணம் கொடுத்தால் விடுவிக்கலாமென இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து முகவர்கள் தம்மிடமிருந்த பணமென 199,000 ரூபா பணத்தை உடனடியாக இளைஞர்களின் கணக்கில் வைப்பிலிட்டுள்ளனர். அதன் பின்னர் , வரணி முகவர் தனது உறவினர் ஒருவரை கைத்தொலைபேசியில் அழைத்து, அவரசமாக ஒரு இலட்சம் ரூபா தேவையென்ற தகவலை கொடுத்ததுடன் கைத்தொலைபேசியில் அழைப்பை துண்டிக்காமல் வைத்திருந்துள்ளார்.

அவர் பேசி முடிந்ததும், இளைஞர்கள் முகவர்களை மிரட்டிய நிலையில், கைத்தொலைபேசி துண்டிக்கப்படாததால், மறு முனையிலிருந்த உறவினர் அதை அவதானித்து, உடனடியாக கொடிகாமம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில், முகவரின் உறவுக்காரர் அங்கு சென்றபோது கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலரும் சென்றனர்.

எனினும் பொலிசார் நெருங்குவதை எப்படியோ அறிந்த இளைஞர்கள் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த முகவர்கள் மூன்று பேரும் பொலிசாரினால் மீட்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞர்களிடம் பணத்தை பெற்றதாக முகவர்கள் ஒப்புக் கொண்டதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 5 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து ஆட்கடத்தல், பண மோசடிஉள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முகவர்கள், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.