கடவுள் ரசித்த கதை-குட்டிக்கதை!!


பால் ஷெம்என்பவர் ஒரு சிற்றூரில் ராபியாக (யூத மத போதகர்) இருந்தார். கிராமத்தில் ஏதாவது துயரம் நேரும்போதெல்லாம் அவர் காட்டுக்குள் போய் ஒரு மரத்தின் அடியில் குறிப்பிட்ட சடங்கைச் செய்து விட்டு, பின் கடவுளிடம் வேண்டுவார். அத்துன்பம் உடனே அவ்வூரை விட்டு அகன்று விடும்.இது வாடிக்கையாக நடந்து வந்தது.

ஒரு நாள் பால் ஷெம் இறந்து விட்டார்.

மீண்டும் கிராமத்தில் ஒரு துன்பம் வந்தது. புது ராபிக்குக் கலக்கம் ஏற்பட்டது.

அவருக்கு குறிப்பிட்ட அந்த மரமும் இடமும் தெரியாது. இருந்தாலும் காட்டிற்குள் சென்று ஏதோ ஒரு மரத்தடியில் நெருப்பை மூட்டி சடங்கை செய்து விட்டுக் கடவுளை வேண்டினார், ''என் குரு வழக்கமாக வந்த இடம் எனக்குத் தெரியாது. ஆனால் உனக்குத் தெரியும். எனவே சரியான இடத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. என் ஊர் துன்பத்தில் உள்ளது. ஏதாவது பார்த்துச் செய்யும்''

துன்பம் போய் விட்டது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்தது.

பின் இந்த ராபியும் ஒரு நாள் இறந்தார். ஊரில் மறுபடியும் ஒரு துன்பம் வந்தது.

புதிய ராபிக்கு நிம்மதி இல்லை. அவருக்கு இடமும் தெரியாது. வேண்டுதலும் என்னவெனத் தெரியாது. சடங்குத் தீயை எப்படி மூட்டுவது என்பதும் தெரியாது.

ஆனால் ஏதோ ஒரு இடத்தில் நெருப்பு மூட்டிக் கடவுளிடம் சொன்னார், ''எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அனைத்து அறிந்தவர் நீர். உமக்கு அவை ஏற்கனவே தெரியும். எனவே எனக்குத் தெரிய வேண்டியதில்லை. தேவையானதைச் செய்யும்''

அவர் கிராமத்திற்குத் திரும்பி வந்த போது கிராமம் துன்பத்திலிருந்து மீண்டது.

பின் அவரும் இறந்தார்.

அப்போது கிராமம் ஒரு துன்பத்தில் சிக்கியது.

ஊர் மக்கள் புது ராபியிடம் வந்தார்கள்.

அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அவர் கடவுளிடம் சொன்னார், ''நான் எங்கும் போக விரும்பவில்லை. கடவுளே, நீர் எல்லா இடத்திலும் இருக்கிறீர். எனக்கு எந்த வேண்டுதலும் தெரியாது. எந்தச் சடங்கும் தெரியாது. அதனால் என்ன?எனக்குத் தெரிந்திருக்கிறதா என்பது ஒரு பொருட்டே இல்லை. உமக்கு எல்லாம் தெரியும். இனி நீர் செய்ய வேண்டியதை செய்யும்''

உடனே பேரிடர் நீங்கியது.

இந்தக் கதையை கடவுள் மிகவும் ரசித்தார் என்று சொல்வார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.