தர்மத்தை எடை போட முடியுமா?

 

தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர், மகளின் திருமணத்திற்காகப் பணம் பெறத் தலைநகர் நோக்கிச் சென்றார்.

செல்லும் வழியில் சாப்பிடத் தேவையான உணவையும் கட்டிக் கொண்டார்.

அவர் வழி நெடுக, கடவுளேத் திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டும், என வேண்டிக் கொண்டார்.

ஓரிடத்தில் அவருக்குப் பசியெடுக்க, ஒரு குளக்கரையில் அமர்ந்து தான் கொண்டு வந்த உணவைக் கையில் எடுத்தார்.

மனதிற்குள், அந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார்.

அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும், தோலுமாக வந்து நின்றது.

இரக்கப்பட்ட அவர் சிறிது உணவை அதன் முன் வைத்தார். ஒரே நொடியில் அந்த உணவை விழுங்கிய அந்த நாய், மீண்டும் தனக்கு உணவு தர மாட்டாரா எனும் ஏக்கத்துடன் அவரைப் பார்த்தது.

“ஒரு நாள் சாப்பிடாவிட்டால், உயிரா போய்விடப் போகிறது?” என்று நினைத்த அந்த விவசாயி, தன்னிடம் மீதமிருந்த உணவையும் அந்த நாய் முன்னால் கொண்டு போய் வைத்தார்.

ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், நம்மால் முடிந்ததை நாமும் செய்வதுதானே முறை என தனக்குள் சொல்லிக் கொண்டார்.

பசியைப் பொறுத்துக் கொண்டு தலைநகரை அடைந்தார்.

அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனைச் சந்தித்து, தான் வந்த விஷயத்தைத் தெரிவித்தார்.

போஜன் அவரிடம், என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே, நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு ஒன்று என்னிடம் இருக்கிறது. அது எந்த அளவு எடை காட்டுகிறதோ, அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள், என்றார் மன்னர்.

“தர்மம் செய்யுமளவு பணம் இருந்தால், நான் ஏன் உங்களிடம் உதவி கேட்டு வரப்போகிறேன்? வழியில் நாய் ஒன்றுக்கு உணவு அளித்தேன். அதற்கு ஈடாக, உங்கள் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டேன். எனவே. நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை” என்று அடக்கமாகச் சொன்னார் விவசாயி.

உங்கள் பசியைப் பொறுத்துக் கொண்டு, நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே என்ற போஜன் தராசைக் கையில் எடுத்தார். ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும், மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தான். கஜானாவில் இருந்த தங்கம் முழுவதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.

அதனைக் கண்டு ஆச்சரியமடைந்த மன்னன், “உங்களைப் பார்த்தால் சாதாரணமானவராகத் தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த விவசாயி, “மன்னா! நான் ஒரு விவசாயி. என்னைப்பற்றிச் சொல்லுமளவுக்கு வேறு ஏதுமில்லை” என்றார் பணிவுடன்.

அப்போது தர்மதேவதை அங்கு தோன்றினாள்.

“போஜனே! தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம். கொடுத்தவரின் மனமே அதன் அளவுகோல். இவர் மனம் மிகவும் பெரியது. அதனால், நீ எவ்வளவு பொன் வைத்தாலும் தராசு முள் அப்படியேதான் இருக்கும். அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ, அதைக் கொடுத்தால் போதுமானது” என்றாள்.

அதை ஏற்ற மன்னன், விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழியனுப்பினான்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.