இறைவன் சொன்ன கணக்கு!!

 


ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர்.


இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து, எனக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

முன்னவர் இருவரில் ஒருவர், என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன என்றார்.

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன என்றார்.

நம்மிருவரிடமிருக்கும் மொத்தம் எட்டு ரொட்டிகள், இதனை நாம் எப்படி மூவரும் சமமாய்ப் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

வந்தவர், இதற்கு நான் ஒரு வழி சொல்ல்கிறேன் என்றார்.

அவர் தொடர்ந்து, “நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். மொத்தம் இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும். அதை நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகளாகப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

சரியான யோசனை என்று அப்படியே மூவரும் ரொட்டியைத் துண்டுகளாக்கிப் பகிர்ந்து கொண்டனர்.

மூவரும் எட்டு துண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது.

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்தவர், அந்தக் காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

மற்றொருவர் அதற்குச் சம்மதிக்கவில்லை.

“மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள், ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்” என்று வாதிட்டார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

“என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்த போதும் நான் பங்கிடச் சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது. இருப்பினும், சமமாகவே பங்கிடுவோம்” என்றார்.

சுமுகமான முடிவு எட்டாததால் விஷயம் அரசனின் சபைக்குச் சென்றது.

அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்தாய் அறிவித்து அரண்மனைக்குச் சென்றான்.

இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தேத் தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர், “மன்னா! இது அநியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார். நீங்கள் அதையும் குறைத்துக் கொடுக்கச் சொல்கிறீர்களே?” என்றார்.

அரசர் சொன்னார்.

“நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டன. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தன. ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம்” என்றார்.

மன்னனின் கனவில் இறைவன் சொன்ன கணக்குதானே சரியானது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.