அரியலூர் அருகே புற்றில் அம்மன் உருவம்: பக்தர்கள் பரவசம்
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அங்காளம்மன் புற்றில் சுயம்புவாக காட்சி தருவதாக அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.
மண் புற்றில் அம்மன் உருவம் உருவாகி உள்ளதை படத்தில் காணலாம்.
அரியலூர்
மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்துள்ள கருக்கை கிராமம் பஸ் நிறுத்தம் அருகே
சேகர் என்பவரது விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சில மாதங்களாக மண்
புற்று வளர்வதும், ஆடு, மாடுகள் மேயும்போது புற்று உடைந்து சிதிலமடைந்தும்
வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகரின் அண்ணன்
மனைவி அந்த விவசாய நிலத்தில் மாடு மேய்த்தபோது, எதிர்பாராதவிதமாக மாடு
முட்டியதில் அவர் மயக்கமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள்
மீட்க முயன்றபோது, அருகில் மண் புற்று இருந்ததை கண்டனர். அதனை உற்று
பார்த்தபோது அதில் அம்மன் முக அமைப்பு போன்ற உருவம் இருந்தது. இதனால்
பரவசம் அடைந்த அவர்கள், இது குறித்து சேகரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக
அங்கு வந்த சேகர் புற்று அமைந்திருந்த இடத்தை சுத்தம் செய்து கொட்டகை
அமைத்து அம்மன் உருவில் உள்ள புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து அருகில்
உள்ள வேப்ப மரத்திற்கும் பூ, வளையல் வைத்து, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து
பாவாடை சாத்தி வழிபட்டனர். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அங்காளம்மன்
புற்றில் சுயம்புவாக காட்சி தருவதாக அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.
இந்த தகவல் அக்கம், பக்கத்தில் உள்ள கிராம மக்களுக்கு காட்டுத்தீ போல்
பரவியதால் ஏராளமான பொதுமக்கள் வந்து, அம்மன் உருவம் உள்ள புற்றை பார்த்து
வழிபட்டு செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை