தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை!

 


ஆடிப்பூரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆடிப்பூரத்தையொட்டி தஞ்சை பெரியகோவில் நேற்று அடைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரத்தையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் ஆடிப்பூரம் தொடங்கியதால் பெரியகோவிலில் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு கோவில்களில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை பெரியகோவில் காலை முதலே மூடப்பட்டது. வழக்கம் போல 4 கால பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவில் மூடப்பட்டது தெரியாமல் வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.