தடுப்பூசி போடாத ஆசிரியர் மீது நடவடிக்கை!


 ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லையென்றாலும், பள்ளிகளை திறக்க அனுமதியில்லை என்றும் தடுப்பூசி போடாத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, பள்ளிகளை திறந்த பின்பு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அதன்படி பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதில், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 351 ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சுமார் 75 சதவிகித ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால், ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இன்று(ஆகஸ்ட் 25) அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்தப் பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதனால், அனைத்து ஆசிரியர்களும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அந்தந்த தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.