ஒரு பெருநெருப்பின் கருவறை!!


ஆண்டாண்டு காலமதாய்

மாறி மாறி ஆண்ட

மாற்றானின் காலில்

சுருண்டு கிடந்த தமிழினத்தை

வெகுண்டெழ வைத்த

தானைத்தலைவனை

வையகத்தில் தந்த வள்ளலே

ஞாலத்தில் தமிழ்க்குலத்தின்

வாழ்விற்காய்

காலத்தின் காவியத்தை

கருவறையில் சுமந்தவரே


அம்மா நீ எங்கள்

அண்ணைத்தமிழின்

அடையாளம்!

விண்ணைக்கிழித்த

வீரம்பரம்பரைமொழியின்

கருவறை!

யாருக்குமே கிடைக்காத

பிரம்மையை பிரசவித்த

பொக்கிசம்!

நீர் இல்லாது உயிரில்லை

நீயில்லாது

நிமிர்வில்லை!

உன்னாலே எல்லாம்

நிகழ்ந்தது.


உன் இருப்பு எல்லாளன் சிலையருகில்

அதனாலே கருவில் மூண்டது

பெரு நெருப்பு

தோழியின் வலியில் துடித்தது

நின் இதயம்!

இதனாலே மலர்ந்தது

இரவி இல்லா இரவில்

ஓர் உதயம்!


வாழையடி வாழையாய்

வளைந்து நெளிந்த இனத்தில்

வந்துதித்தான் உன் தருமன்!

கோழையாய் வாழ்ந்தவனும்

கோபம் கொண்டெழுத்தான்

நிமிராத பிடரியை

நிமிர்த்தி நின்றான்!


தீராத வலியெல்லாம் தீர்ந்ததென்று

மார்புயர்த்தி வாழ்ந்தோம்!

கோடான கோடி கனவுகளில்

கோலோச்சி எழுந்தோம்!


எல்லாமே

மலையே மண்டையில்

சரிந்து வீழ்ந்ததாய்

சிதைந்து போனது!

அலையலையாய் பொங்கிய

கனவுகள் கானல் நீராய்

கரைந்து போனது!


ஆனாலும்

தாயே நீ தந்த தமிழ்வீரத்தில்

வினைத்திறனாய்

வெளிவருவோம்!

நீ விதைத்த விடுதலையின் நெருப்பில்

சூடு தணியாது

எம் பாடு பொருளை

அடைவோம்.


✍தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.