வவுனியா நகர அழகுபடுத்தல் திட்டத்தில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம்

 

இலங்கையின் 100 நகரங்கள் அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் வவுனியா நகர அழகுபடுத்தல் திட்டமும் நகர அபிவிருத்தி அதிகார சபையால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம் என வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.


வவுனியா நகரசபையில் நேற்று(07.08) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டம் ஒன்று வந்திருக்கின்றது. அத் திட்டத்தின் கீழ் வவுனியா நகரமும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்கள், இந்த நிதியைக் கொண்டு வருவதற்கு தாங்கள் தான் முயற்சி செய்ததாக தெரிவித்திருந்தார். அது ஒரு பொய்யான கருத்து.

இலங்கையின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டம் ஒரு வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்தது. ஏற்கனவே எமது மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருடன் இணைந்து இது தொடர்பில் கள விஜயமும் மேற்கொண்டு வவுனியா நகரத்தை எவ்வாறு அழகுபடுத்துவது என திட்டமிட்டு இருந்தோம். இதற்கு நகரசபை அமர்விலும் ஏகமனதாக அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனை யார் செய்தார்கள் என்பது முக்கியமான விடயமல்ல. இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இது நகர அபிவிருத்தி அதிகார சபையின்  நிதி மூலம் வந்தது. எந்தவொரு அரசியல் உள்வாங்கலோ அல்லது அரசியல்வாதியின் செயற்பாட்டாலோ நிதி வரவில்லை.

வவுனியா மட்டுமன்றி வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி என நாடு முழுவதும் 100 நகரங்களுக்கு இந்த நிதி வந்துள்ளது. இரண்டு கோடி ரூபாய் என்பது இந்த திட்டத்தை செயற்படுத்த மிகச் சிறிய தொகையாகவே காணப்படுகின்றது. இது தொடர்பான முழுமையான திட்டமும் விளக்கமும் எம்மிடமே உள்ளது.

வடக்கில் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஈபிடிபி பெற்றுக் கொடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரால் கூறப்பட்டது. நல்ல விடயம். அது உங்களது கடமை. அதை சொல்லிக் காட்டி விளம்பரம் தேட வேண்டாம். அதற்காகவே மக்கள் வாக்களித்து உங்களை நாடாளுமன்றம் அனுப்பினார்கள். அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அரசியல் என்பது மக்களது தேவைகளை பூர்த்தி செய்யவே. அதனை செய்ய வேண்டும். அதைவிடுத்து நான் அதை செய்தேன். இதைச் செய்தேன் என சொல்லிக் காட்டி அடுத்த கட்ட அரசியல் நோக்கி எதனையும் செய்ய கூடாது. மக்களுக்காகவே நாம் சேவையாற்றுகின்றோம்.

100 நகரங்களின் வேலைத்திட்டத்தின் உண்மைத் தன்மையை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தவகையில், வவுனியா நகரின் அழகுபடுத்தல் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம் எனவும் தெரிவித்தார். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.