வலிமை ஷூட்டிங்கில் அஜித் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை!

 


அஜித் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘வலிமை’. அஜித்தின் 60வது படமான இதை ஹெச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துவருகிறார். யுவன் இசையில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி தரமான ஹிட். வலிமை அப்டேட் கேட்டு கதறிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு முதல் சிங்கிள் பெரிய போனஸாக அமைந்தது.

அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடமே முடிந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு முடிப்பதில் தாமதாகிவிட்டது. வலிமைக்கான பெரும்பாலான கட்சிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே நடத்தப்பட்டது நமக்குத் தெரிந்த விஷயம். இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் அஜித்தின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படியெல்லாம் இருந்தது தெரியுமா?

வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடந்துவந்தது. அப்போது, கொரோனா அச்சுறுத்தலுக்கான முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகமே படப்பிடிப்பை நிறுத்தியது. அதோடு, வலிமை ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. ஆனால், அஜித் நேராக வீட்டுக்குச் செல்லவில்லை. குடும்பத்தின் மீதும், குழந்தைகளின் மீதும் பெரும் அக்கறைக் கொண்டவர் அஜித். கொரோனா குறித்த பெரிய விழிப்புணர்வு இல்லாத நேரம். 200க்கும் மேல் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றிவிட்டு நேராக வீட்டுக்குச் செல்ல அஜித் விரும்பவில்லை. குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக 15 நாட்கள் தனியாக தங்கியிருந்துவிட்டு, பின்னர் வீட்டுக்குச் சென்றாராம்.

அடுத்ததாக, முதல் அலைக்கான லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது, கடந்த வருட அக்டோபரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கியது வலிமை டீம். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்தக் கட்ட ஷூட்டிங்கை நவம்பர் மாதம் திட்டமிட்டது. அந்த இடைப்பட்ட நாட்களிலும் வீட்டுக்குச் செல்லவில்லை அஜித். நண்பர்களுடன் பைக் ட்ரிப் செல்ல திட்டமிட்டார். அஜித்தின் ஃபேவரைட் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கில் வட இந்தியா முழுவதும் ஒரு ட்ரிப் சென்றார். அந்தப் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. மீண்டும் படக்குழு ஹைதராபாத் வரும் வரைக் காத்திருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு சென்றாராம் அஜித். அஜித்தின் வட இந்திய டூருக்கான நிஜ பின்னணி இதுதான் எனக் கூறப்படுகிறது.

இறுதியாக, அஜித்தின் வலிமை ஷூட்டிங்கில் கொரோனா முன்னெச்சரிக்கைக்கென ஒரு தனிக் குழுவே செயல்பட்டதாம். ஷூட்டிங் பகுதி முழுவதும் சானிடைஸ் செய்வது, அஜித்துடன் நெருங்கி பணியாற்றும் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என அனைவருக்குமே தினமும் புதிய N95 மாஸ்க் வழங்குதல், புதிதாக செட்டுக்கு வரும் நடிகர்களுக்கு கொரோனா பரிசோதனை என அஜித்தின் ஆலோசனைப்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

வலிமை படத்துக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது படக்குழு. இன்னும் 10 தினங்களுக்கான கட்சிகள் மட்டுமே மீதமிருக்கிறது. திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் இந்த வருடம் நிச்சயம் வலிமை வெளியாகிவிடும் என்று நம்பிக்கையாகச் சொல்லப்படுகிறது

- தீரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.