ஓபிஎஸ் ஈபிஎஸ் நேரில் ஆஜராக மீண்டும் உத்தரவு!

 


வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து கடந்த ஜூன் 14ஆம் தேதி நீக்கப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் ஈபிஎஸ் மீது புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராகுமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். இருவரது கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் புகழேந்தி தொடர்ந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரகாஷ், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் இருவரும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்பதால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டியுள்ளதாகவும் வாதிட்டார்.

மேலும் புகழேந்தி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரித் தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராகாததற்குக் காரணம் நியாயமானது தான் என்று தெரிவித்ததுடன் வழக்கின் முதல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் என்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு இருவரும் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் ஆஜராக உத்தரவிட்டார்.

-பிரியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.