கணவரைக் கொன்ற இளம்மனைவியும் ஆணொருவரும் கைது!!

 


இரத்தினபுரியில் கணவனிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த இளம் தாயையும், கள்ளக்காதலனையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம், இரத்தினபுரி- கிரிவெல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த தம்பதியின் 8 வயது குழந்தை இப்பொழுது பெற்றோரின் அரவணைப்பை இழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வழமைபோலவே ஆடைத்தொழிற்சாலைக்கு கடந்த 20ஆம் திகதியன்று வந்திருந்த அப்பெண் வேலை செய்துகொண்டிருந்த போதே, மனிதவள முகாமைத்துவ திணைக்களத்துக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

அது தொடர்பில், அப்பெண்ணுக்கு அறிவித்த திணைக்களம், வாகனமொன்றையும் ஏற்பாடு செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்தப் பெண் வீட்டுக்கு சென்றபோது, கணவன் உயிரிழந்திருந்தார். எனினும், கத்திப்புலம்பி ஊராரை கூப்பிட்டுவிடாமல், தன்னுடைய கணவன் கொரோனாவால் மரணமடைந்து விட்டார் என அக்கம் பக்கத்தினருக்கு கூறியுள்ளார். அதனால், சடலத்தைப் பார்ப்பதற்கு யாரும் வரவில்லை.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை, பொலிஸார் இரத்தினபுரி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றால் அவர் மரணிக்கவில்லை என்றும் செயற்கையான மூச்சுத்திணறல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என்றும் கண்டறியப்பட்டது.

அதனையடுத்து, சந்தேகமடைந்த பொலிஸார், மனைவியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முதல்நாள் -19ஆம் திகதியன்று- இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர், தன்னுடைய கணவனுக்கு ஒரு கிளாஸ் பால் கொடுத்த மனைவி, பாலுடன் ஆறு தூக்க மாத்திரைகளையும் கலந்துள்ளார். அதனைக் குடித்த சிறிது நேரத்திலே​​யே கணவர் நன்றாக கண்ணயர்ந்துவிட்டார்.

உடனடியாக தன்னுடைய காதலனுக்கு ​தொலைபேசி அழைப்பை எடுத்த அந்தப் பெண், வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்தவுடன், கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்ற இவ்விருவரும், சென்று கொலை செய்துள்ளனர். உறக்கத்திலிருந்த கணவனின் கால்களை, கள்ளக்காதலன் இறுக்கமாக பிடித்துக்கொள்ள, மனைவி, தனது கணவனின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சு திணறச்செய்துள்ளார். அவர் மரணமடைந்துவிட்டார் என தெரிந்துகொண்டதன் பின்னர், காதலன் வந்த வழியிலேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பெண் பணியாற்றும் ஆடைத்தொழிற்சாலையில், மேற்பார்வையாளராகப் பணியாற்றுபவரே கள்ளக்காதலனாகியுள்ளார். தன்னுடைய கணவன் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் கடுமையாக துன்புறுத்துவதாக, அந்த மேற்பார்வையாளரின் கவனத்துக்கு அப்பெண் கொண்டுவந்துள்ளார். அதுவே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. எனினும், அந்தக் காதலுக்கு காதலியின் வீட்டார் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்துள்ளனர் என்பது விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

அப்பெண்ணும் மேற்பார்வையாளரும் சேர்ந்து, இரத்தினபுரியில் உள்ள மருந்தகங்களில் ஒவ்வொரு தூக்க மாத்திரையாக ஆறு மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் இரத்தினபுரி நீதவான் நீதிபதி ஜனிதா ரொசானி முன்னிலையில், நேற்று முன்தினம் (21) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, இருவரையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.   

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.