தலைமைப் பதவிக்கு வந்தால்...


தேவர்களின் அரசனான இந்திரன், தங்களைத் துன்புறுத்தி அடிமைப்படுத்திய அசுரனான விருத்திராசுரனை எதிர்த்துக் கடும் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

தேவர்கள் கொலை புரிந்தால் அது பாவக்கணக்கில் சேர்ந்து, அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். இறைவனே என்றாலும் இந்தத் தோஷத்தில் இருந்து தப்ப முடியாது. இந்திரனுக்கும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுப் பதவியை இழந்து மறைவாக வாழ்ந்தான்.

தலைமை இல்லாத தேவர்களால் எந்த விஷயங்களிலும் முடிவெடுக்க முடியவில்லை. இதுபற்றி அனைவரும் ஆலோசித்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். இந்திரப் பதவிக்குத் தகுந்தவர் யாரென்ற பரிசீலனையில் பூலோகத்தில் பல நற்செயல்களை செய்து மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்ற அரசனான நகுஷன் பெயர் முடிவு செய்யப்பட்டது. அவனிடம் சென்று தேவர்கள் அனைவரும், தங்களுக்கு தலைவனாகும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினர். அவன் தன்னடக்கத்துடன் மறுத்தாலும் தேவர்கள் விடவில்லை.

“நீங்கள் எங்களுக்குத் தலைவனாக பொறுப்பேற்றால் நாங்கள் செய்யும் தவத்தின் பலன் உங்களையேச் சேரும். அதனால் உங்கள் உடல் அழகு மேலும் பொலிவு பெறும். அத்துடன் அனைவரிலும் சிறந்த பலசாலியாகவும் திகழ்வீர்கள்” என ஆசை காட்டினர்.

விதியும்... பதவி ஆசையும் யாரை விட்டது? நகுஷனும் ஒப்புக் கொண்டான். தேவர்களின் தலைமைப் பதவியை ஏற்றான்.

பதவிக்கு வந்த புதிதில் நீதியுடன் ஆட்சி நடத்திய அவனின் குணம், நாளடைவில் மாறத் தொடங்கியது. தேவர்களிடம் தனது சர்வாதிகாரத்தை காட்டினான். தாங்களே விரும்பி அவனைப் பதவியில் அமர்த்தியதால் தேவர்களால் அவனை எதிர்க்கவும் முடியவில்லை.

தேவர்களுக்குப் பல துன்பங்களைத் தந்தவன் தேவலோகப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. பூமியில் நல்லவனாக இருந்த நகுஷன் உயரிய பதவி கிடைத்ததும் தன் நற்குணங்களை இழந்து புத்தி தடுமாறினான்.

ஒரு நாள் அவன் கண்களில் இந்திரனின் மனைவியான இந்திராணி பட்டுவிட்டாள். அவள்மீது மோகம் கொண்ட நகுஷன், அவளை அடையவேண்டி அவளுக்குப் பல துன்பங்களைத் தந்தான். அவனது இழிவான எண்ணத்தை அறிந்த இந்திராணி தேவகுருவான பிரகஸ்பதியிடம் சென்று தன்னைக் காத்துக் கொள்ள வழி சொல்லுமாறு வேண்டினாள்.

அவர் ‘நகுஷன் பலம் பெற்றவனாக இருப்பதால் அவனை எதிர்க்கும் வலிமை யாருக்கும் இல்லை. ஆனால் தகுந்த முனிவரின் சாபம் கிடைத்தால் அவனின் பதவி பறிபோகும். அதன்பின் இந்திரனே ஆட்சிக்கு வந்துவிடுவான்’ என்றும் சொல்லி அதை நிறைவேற்ற அவளுக்கு ஒரு வழியையும் கூறினார்.

அதன்படி நகுஷனிடம் சென்ற இந்திராணி ‘என் கணவர் இருக்குமிடம் தெரியவில்லை. அவர் இந்த உலகில் எங்குமே இல்லை என்று தெரிந்தால்தான் உன்னை நான் மணக்க முடியும். அப்படிச் செய்வதால் நாம் இருவருமே பழியில் இருந்தும், தோஷத்தில் இருந்தும் தப்பிக்கொள்ளலாம். எனவே என்னை இந்திரனைத் தேடிச் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று அனுமதி கோரினாள். அவனும் அனுமதித்தான்.

இந்திராணி, மகாவிஷ்ணுவை வேண்டித்தவம் இருந்து, இந்திரன் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தாள். இந்திரன் நகுஷனின் பதவியைப் பறிக்கத் தக்க வழியைக் கூறி, அதன்படி நடக்குமாறு இந்திராணியிடம் ஆறுதல் தந்தான்.

கணவன் தந்த தைரியத்தில் மீண்டும் தேவலோகம் வந்த இந்திராணி நகுஷனிடம் ‘மூன்று லோகங்களிலும் தேடிப்பார்த்து விட்டேன். எங்கும் இந்திரனைக் காணவில்லை. ஆதலால் என்னைத் தாங்கள் மணக்க எனக்கு பரிபூரண சம்மதம். ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். நானே இந்தத் தேவலோகத்தின் ராணி என்பதால், தாங்கள் நான் இருக்குமிடத்திற்கு சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் வந்து, என்னை ஏற்றுக்கொண்டால் எனக்கு பெரும் கவுரவமாக இருக்கும்’ என்றாள்.

நகுஷனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மணமகனாகத் தன்னை அலங்கரித்து, சப்தரிஷிகளை அழைத்துத் தன்னைப் பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லும்படி உத்தரவிட்டான்.

முனிவர்கள் அவன் செயல்கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தாலும், தேவர்களின் தலைவனான அவனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவன் அமர்ந்த பல்லக்கைச் சுமந்து சென்றனர்.

முனிவர்களின் வயது முதுமை காரணமாக, மெதுவாகப் பல்லக்கைச் சுமந்து நடக்க, நகுஷனோ ரிஷிகளைப் பழித்துப் பேசி விரைவாகச் செல்லக் கட்டளையிட்டான். இதனால் அவனை முனிவர்கள் பாம்பாக மாறும்படி சபித்தனர். மறு கணமே அவன் தன்னுடைய சக்திகளை இழந்து, பாம்பாக மாறிப் பூமியில் வந்து விழுந்தான். இந்திரனின் தோஷம் நீங்கி அவனே மீண்டும் தலைவன் ஆனான்.

பாம்பாக மாறிய நகுஷனுக்கு சுயபுத்தி வந்து, தன் தவறுகளுக்கு வருந்தி தவ வாழ்க்கையை மேற்கொண்டான்.

கிடைத்தற்கரிய பதவி கிடைத்தும், தவறான போக்கினால் பாம்பாக மாறித் தண்டனையை அனுபவித்த நகுஷன், பதவி மோகத்தில் தவறு செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இன்றும் உதாரணமாகயிருக்கிறான்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.