இலங்கையில் கடந்த 10 நாட்களில் கொரோனாவுக்கு 832 பேர் பலி!!

 


நாட்டில் கடந்த 10 நாட்களில் 832 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளுக்கு நாள் கொவிட் தொற்றின் காரணமாக பதிவாகும் மரணங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் கொவிட் தொற்று பரவல் ஆரம்பமான நாள் முதல் நேற்யை தினமே நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகின.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றையதினம் 156 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 121 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதுடன் எஞ்சிய 35 பேரும் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவார்கள். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக உயர்வடைந்துள்ளதுடன் கடந்த 4 தினங்களாக இவ்வாறு நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து கடந்த 10 ஆம் திகதி வரையான 10 நாட்களில் மாத்திரம் நாட்டில் 832 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி கடந்த 10 நாட்களில் உயிரிழந்தவர்களில் 645 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

அதே போன்று 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 182 பேரும் , 30 வயதுக்கு உட்பட்டோரில் 5 பேரும் கடந்த 10 நாட்களில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இன்று காலை வரை பதிவாகியிருந்த 5,620 கொவிட் மரணங்களில் 5,011 மரணங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் உருவாகிய 'புத்தாண்டு கொத்தணி' என்று அடையாளப்படுத்தப்படுகின்ற மூன்றாவது அலையில் பதிவாகியமையாகும்.

இவற்றில் 19 கர்ப்பிணிகளின் மரணங்களும் உள்ளடங்குகின்றன. எஞ்சியவற்றில் 596 மரணங்கள் இரண்டாவது அலையிலும் , 13 மரணங்கள் முதலாவது அலையிலும் பதிவாகியுள்ளன.

மேலும் நேற்று வியாழக்கிழமை 2,993 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 3 இலட்சத்து 45 ஆயிரத்து 118 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 3 இலட்சத்து 2 ஆயிரத்து 455 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 37 ஆயிரத்து 199 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.