இரண்டு தடுப்பூசி செலுத்துகைகளையும் பெறுவதோடு, மக்கள் பொறுப்புடனும் செயற்படுவது மட்டுமே வழி!


60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து பிரத்தியேக கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நான்  அறிவுறுத்தியுள்ளேன்.


கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மரணங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி,


உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,


இவர்களில் அதிக சதவீதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்ட, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்துக் கவனம் செலுத்தி, விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன்.


ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற, கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடனான சந்திப்பின் போதே இந்த விடயங்களை நான் தெரிவித்தேன்.


PCR மற்றும் அன்டிஜன்ட் பரிசோதனைகளைச் செய்யும் போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன்.


சிறுநீரக மாற்று அல்லது இரத்தச் சுத்திகரிப்புக்கு உள்ளான நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.


தொற்றா நோய்களுக்கான சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களைப் பெற்று,


சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பிரத்தியேக கவனத்துக்குக் கொண்டு வருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


மேல் மாகாணத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட, ஆனால் பல்வேறு நோய்கள் காரணமாக இதுவரை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அடுத்த சில நாட்களில் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,


பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியும்  இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.


ஒரு தடுப்பூசியைப் பெற்றிருப்பது, நோயிலிருந்து பாதுகாப்புப் பெற போதுமானதல்ல.


எனவே, தடுப்பூசியின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்று,


நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு காலம் வரும் வரை பொறுப்புடன் மக்கள் செயற்பட வேண்டும் என்பதனை,


கொவிட் குழு உறுப்பினர்களான விசேட மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.


மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பது,


விசேட தேவைகள் மற்றும் கடமைகளுக்காக அழைக்கப்படாத அனைவரையும் வீட்டில் வைத்திருப்பது,


மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி நோய் பரவுவதைத் தடுக்க உதவுவது என்பன -


பொதுமக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்பதனையும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.


அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி மற்றும் சன்ன ஜயசுமன, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியும்  இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் கொவிட் ஒழிப்பு விசேட குழுவின் உறுப்பினர்கள், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.