பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு வந்த குதிரைகள் தடுத்து நிறுத்தம்!
மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமாக உருவாகிவருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவிவர்மா ஒளிப்பதிவில் லைகாவுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படத்துக்கான சமீபத்திய படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதன்பிறகு, கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில், அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் துவங்கியது படக்குழு.
உத்திரபிரதேசம் ஜான்சிக்கு அருகில் உள்ள ஒர்ச்சாவில் கடந்த மூன்று தினங்களாகப் படப்பிடிப்பு நடந்தது. இந்த ஷூட்டிங்கில் பிரகாஷ்ராஜ், கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். உபி-யில் படப்பிடிப்பை நடத்தக் காரணம் இருக்கிறதாம். பழங்கால கோட்டைகள் அதிகமாக அந்தப் பகுதிகளில் இருப்பதால் பெரும்பாலான படப்பிடிப்புகளை செட் இல்லாமல் லைவாக ஷூட் பண்ணவே இந்தத் திட்டம்.
அதன்படி, அடுத்தக் கட்ட ஷூட்டிங் குவாலியர் பகுதிகளில் இருக்கும் கோட்டைகளில் தற்பொழுது நடந்துவருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து குதிரைகளை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளது படக்குழு.
குதிரையில் வீரர்கள் போரில் பங்கேற்கும் காட்சிகளை படமாக்கிவருகிறதாம் படக்குழு. அதற்காக 18 குதிரைகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில், குவாலியரின் விக்கி பேக்டரி பகுதிக்குள் 18 குதிரைகளுடன் சென்ற 5 மினி லாரிகளை தடுத்து நிறுத்தியுள்ளது ஜான்சி காவல் நிலைய போலீசார். 18 குதிரைகளையும் கைப்பற்றி அருகிலிருந்த பூல்பாக் மைதானத்தில் பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.
அதன்பிறகு, சோதனையை மேற்கொண்டுள்ளனர் போலீஸ் அதிகாரிகள். குதிரைகளைக் கொண்டு செல்வதற்கான தகுந்த ஆவணங்கள் இருந்துள்ளது. அதோடு, இயக்குநர் மணிரத்னத்திடமும் பேசி உறுதி செய்தப் பின்னர் குதிரையை விடுவித்துள்ளனர். அதோடு, பாதுகாப்புடன் படப்பிடிப்புத் தளத்துக்கும் கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது.
ஆய்வு மேற்கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தால், முஸ்லீம் பண்டிகையான மொஹரம் கொண்டாட்ட நேரமென்பதால் நகரமெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறதாம். அதனால், குதிரைகள் கடத்தப்படுகிறதோ என்கிற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
- தீரன்
கருத்துகள் இல்லை