பிறந்தநாளைக் கொண்டாடிய விஜயகாந்த்!

 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் நேற்று (ஆகஸ்ட் 25) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 69ஆவது பிறந்தநாள் . இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக, தொண்டர்கள் யாரும் பிறந்த நாளன்று நேரில் வர வேண்டாம் எனவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாட வேண்டும் எனவும் விரைவில் உடல்நலப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் அவரது பிறந்தநாளை இன்று எளிமையாகத் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று யாரும் வரவேண்டாம் என்று கூறினாலும், கட்சித் தொண்டர்கள் கோயில்களில் அவரது பெயரில் சிறப்புப் பூஜைகள் செய்து வருகின்றனர்.

தர்மபுரி சாலை விநாயகர் கோயிலில் தேமுதிக கிழக்கு மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் விஜயகாந்த் பெயரில் அர்ச்சனை செய்து சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், தர்மபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது 69 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

அதுபோன்று முதல்வர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விஜயகாந்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேமுதிக தலைவரும், தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் 'கேப்டன்' விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டு விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றபோது எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர் துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது இல்லத்தில் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடிய புகைப்படத்தை விஜயகாந்த் பகிர்ந்துள்ளார்.

-பிரியா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.