தடுப்பூசி மூலமே கொரோனாவை கட்டுப்படுத்தலாம்!


“கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியேற்றல் நடவடிக்கையே சிறந்த தீர்வாகும். எனினும் தடுப்பூசி தொடர்பில் சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போலி பிரச்சாரங்களை ஒருபோதும் நம்ப வேண்டாம்” என பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு செயற்படும் பொது வைத்திய நிபுணரான  மருத்துவர் கமால் அப்துல் நாசர் தெரிவித்துள்ளார்.

கோவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பில்  இணைய வழி கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

“கொரோனா தடுப்பூசியேற்றல் குறித்து சமயத் தலைவர்கள் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை. சமயத் தலைவர்கள் யாராவது தடுப்பூசி தொடர்பி ல் பிழையான விடயத்தினை கூறினால்,  அவர்களை நேரடியாக எதிர்ப்பது நல்லதல்ல.

மாறாக, அந்த பிழையான விடயத்தினை வெளிக்கொண்டு வந்து, வைத்திய நிபுணர்கள் மூலம் சரியான விடயத்தினை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

கோவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டால் குழந்தை கிடைக்காது என்ற பிரச்சாரமொன்று தற்போது முன்னெடுக்க்பபட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானதாகும்.

கர்ப்பிணித் தாய்மார்கள், பாலுட்டும் தாய்மார் இந்த தடுப்பூசியினை பெற முடியும். அதில் எந்த பிரச்சினையும் வரமாட்டாது. அத்துடன் எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்களும் இந்த தடுப்பூசியினை பெற முடியும்.

கோவிட் தொடர்பில்  சமூகவலைத்தளங்களில்  வரும் தகவல்கள் அனைத்தையும் நம்ப வேண்டாம். அது தொடர்பில் வைத்திய நிபுணர்களை அணுகி தெளிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசிகளின் ஊடாக நோய் தாக்கத்தை குறைத்து மரண எண்ணிக்கையினையும் குறைக்க முடியும். அமெரிக்காவினால் கோவிட் – 19க்கு எதிராக தயாரிக்கப்பட்ட பைசர் மற்றும் மொடோனா தடுப்பூசிகள் சுமார்   92 வீதமான பாதுகாப்பை வழங்குகின்றன.

இது போன்று இலங்கையில் அதிகம் ஏற்றப்படும் சீனாவின் தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசியும் கோவிட் – 19 இல் இருந்து பாதுகாப்பை தருகின்றது. இதனால் தாமதிக்காமல் ஏதாவதொரு தடுப்பூசியினை உடனடியாக பெற்றுக்கொள்வதே சிறந்ததாகும்.

இன்னுமொரு தடுப்பூசி வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டாம். தடுப்பூசிகளிடையே அதன் திறனில் வித்தியாசம் காணப்படலாம். எனினும்  ஏதாவதொரு தடுப்பூசியை பெறுவதே சிறந்ததாகும்.

தடுப்பூசியேற்றல் நடவடிக்கையின் போது கட்டாயம் சமூக இடைவெளியினைப் பேண வேண்டும். இலங்கையில் தடுப்பூசி வழங்கப்படும் இடங்களில் சமூக இடைவெளியைக் காண முடியவில்லை.

சமூக இடைவெளி பேணாது தடுப்பூசி பெறுவதனால் கோவிட் தொற்றுக்குள்ளாக வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இன்று சிலர் தடுப்பூசி ஏற்றியதால் கோவிட் தொற்று ஏற்படுவதாக பிழையான கருத்துக்களை பரப்புகின்றனர். இது தவறானதாகும். தடுப்பூசிகள் மூலம் வைரஸ் பரவாது.

மாறாக தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களில் மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பேணாததன் காரணமாகவே தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புண்டு. இதனை அறியாமல் தடுப்பூசியேற்றியதன் பின்னரும் கோவிட் தொற்றியுள்ளதாக பிழையான தகவல்களை பரப்புகின்றனர்.

முதலாவது, இரண்டாவது   தடுப்பூசிகளைப் பெற்று இரு கிழமைக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் அதிகரிக்கின்றது. முதலாவது தடுப்பூசி எடுத்து நான்கு கிழமைக்கு பின் இரண்டாவது தடுப்பூசி எடுப்பது சிறந்தது இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப் பெறுகிறது.

கோவிட் தொற்று ஏற்பட்டவர் அந்த நாளில் இருந்து 28 நாட்களின் பின்னரே தடுப்பூசியினை பெறுவது சிறந்ததாகும். இந்த நோயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக  அதிகம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பி.சீ.ஆர், அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்.

அண்மையில் சீனாவின் வூகான் நகரில் கோவிட் மீண்டும் பரவியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சுமார்  1 மில்லியன் பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக வைரஸ் பரவல்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தற்போதைய நிலையினை ஒப்பீடுகளையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கோவிட-19 தாக்கம் உச்சத்தை அடையக்கூடிய வாய்ப்புள்ளது. இதனால் அந்த கால கட்டத்தில் கோவிட் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மூக்கு வடிதல், இருமல் போன்றன டெல்டா வைரஸ் தொற்றாளர்களுக்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுகின்றவர்கள் உடனடியாக பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்ததாகும்.

கோவிட் தடுப்பூசிகளை பெற்றுகொண்டவர்கள் இரு நாட்கள் ஓய்வெடுத்த  பின்னரே தொழிலுக்கு செல்வது சிறந்ததாகும். ஏனென்றால் சிலருக்கு 24 மணி நேரத்தின் பின் உடம்பு வலி, காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், இது 48 மணி நேரத்திற்குள் அது மறைந்து விடும்.

 தடுப்பூசியேற்றிவர்களிடம் வைரஸ் ஒருபோதும் உருமாற்றம் பெறாது. தடுப்பூசி தயாரிக்கப்படுவதற்கு முன்னரே இந்த வைரஸ்,   இங்கிலாந்து, தென்னாபிரிக்க மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உருமாற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். தடுப்பூசி காரணமாக இந்த உருமாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பது முக்கிய விடயமாகும்.

இது போன்று சமூக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்கும் புறம்பான விடயங்களை நம்புவதை தவிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எவ்வளவு வேகமாக தடுப்பூசி ஏற்ற முடியுமோ அந்தளவிற்கு தடுப்பூசியேற்றி கோவிட் – 19 இனை முறியடிக்க முன்வர வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.