உள்ளாட்சித் தேர்தலில் எழுச்சி பெறுவோம்: விஜயகாந்த்!

 


உள்ளாட்சித் தேர்தல் உட்படத் தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்று நேற்று (செப்டம்பர் 13) அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில் அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்க உள்ளன.

இந்தச் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக எழுச்சி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை (செப்டம்பர் 14) முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உங்கள் பகுதியிலேயே கழகக் கொடியை ஏற்றி ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கு’ என்கிற கொள்கை அடிப்படையில் ஏழை மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கழகம் தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் அவர், தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர, அது வீழ்ச்சி அல்ல எனவும் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக பலத்தையும் நாம் அனைவரும் நிச்சயமாக நிரூபிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும். மக்களுக்காக நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடு நாம் அனைவரும் பயணிப்போம் என்று தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிகிச்சைக்காக துபாய் சென்ற விஜயகாந்த் கடந்த 11ஆம் தேதி சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி அமமுகவுடன் கூட்டணி வைத்து 60 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.