ஒரே மேடையில் ராமதாஸ்-ஸ்டாலின்!

 


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக பொது மேடையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் முதல்வர் ஸ்டாலினும் நேற்று செப்டம்பர் 13 ஆம் தேதி சந்தித்துக்கொண்டனர்.

ராஜய்சபா உறுப்பினரான டாக்டர் அன்புமணி ராமதாஸின் மகளும் ராமதாஸின் பேத்தியுமான டாக்டர் சங்கமித்ராவிற்கும் டாக்டர் சங்கர் பாலாஜிக்கும் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. ஏற்கனவே தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து டாக்டர் அன்புமணி தனது மகளின் திருமண வரவேற்பு பத்திரிக்கையை அளித்து அழைத்திருந்தார். அதையேற்று நேற்று மாலை முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே .என் .நேரு, பொன்முடி,எ.வ. வேலு மற்றும் உதயநிதி உள்ளிட்டோரும் டாக்டர் ராமதாஸ் இல்ல திருமண விழாவிற்கு சென்றனர்.

அனைவரையும் அன்புடன் வரவேற்ற அன்புமணி ராமதாஸ், “நீங்க வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி” என்று முதல்வரிடம் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுகவும் பாமகவும் மிகக் கடுமையான வார்த்தைகளில் மோதிக் கொண்ட நிலையில் புதிதாக அமைந்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு அரசாணை, இட ஒதுக்கீடு போராட்டத்தில் கொல்லப்பட்ட 21 தியாகிகளுக்கான மணிமண்டபம் என அறிவித்ததை பாமக வரவேற்றது. அவற்றுக்கு நன்றி சொல்வதற்காக டாக்டர் ராமதாஸ் முதல்வரை சந்திக்க விரும்பிய நிலையில் தமிழகத்தின் மிக மூத்த தலைவரான டாக்டர் ராமதாஸ் தன்னைத் தேடி வந்து சந்திப்பதில் முதல்வருக்கு உடன்பாடில்லை. நானே வருகிறேன் என்று சொல்லியனுப்பியிருந்தார். அதனால் டாக்டர் ராமதாஸ் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு தள்ளிக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான் அன்புமணி தனது மகளின் திருமண அழைப்பிதழோடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததோடு தங்களின் முக்கியமான கோரிக்கைகளான 10.5% அரசாணை, இட ஒதுக்கீடு தியாகிகளுக்கான மணிமண்டபம் ஆகியவற்றுக்காக தனிப்பட்ட முறையிலும் தந்தை சார்பிலும் கட்சி சார்பிலும் நன்றி தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில்தான் அன்புமணி மகள் திருமணத்தில் டாக்டர் ராமதாஸும், முதல்வர் ஸ்டாலினும் நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். முதல்வர் ஸ்டாலினை வாஞ்சையோடு வருடிய டாக்டர் ராமதாஸ், அவரது நலம், குடும்பத்தினர் நலம் பற்றி விசாரித்தார். முதல்வரும் டாக்டர் ராமதாஸின் உடல் நலத்தை கேட்டறிந்தார். மணமக்களின் இருபுறமும் டாக்டர் ராமதாஸ் , முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் முதலில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். முதல்வருக்கு ராமதாஸ் சால்வையை கொடுக்க அடுத்து, ‘துரைக்கு ஒண்ணு கொடுங்கப்பா’என்று கேட்டு அன்புமணியிடம் இருந்து இன்னொரு சால்வையை வாங்கி துரைமுருகனிடம் கொடுத்தார் ராமதாஸ். பிறகு ஸ்டாலினை தன்பக்கம் அழைத்து மீண்டும் போட்டோ எடுத்துக்கொண்டார் ராமதாஸ்.

அப்போது அமைச்சர் கே.என். நேருவைப் பார்த்து ராமதாஸ் ஏதோ சொல்ல, அப்போது துரைமுருகனின் கமெண்ட்டுகளால் அந்த இடம் சிரிப்பால் நிரம்பியது. ஸ்டாலினின் தோளை தட்டி அழைத்து தன்னருகில் அழைத்து அவரது காதில் ஏதோ ராமதாஸ் கூற தலையாட்டிக் கொண்டார் முதல்வர். இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினும் டாக்டர் ராமதாசை சந்தித்து தனது மரியாதையை தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத் உள்ளிட்டோரோடு வந்து மணமக்களை வாழ்த்தினார். தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசையும் வாழ்த்தினார்.

தமிழகத்தில் திருமணங்களில் அரசியல் என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சில திருமண விழாக்கள் அரசியல் கூட்டணிகளை மாற்றிய வரலாறு தமிழகத்திற்கு உண்டு. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் டாக்டர் ராமதாஸும், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டது குடும்ப அளவில் மட்டுமல்ல இரு கட்சி அளவிலும் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.