தலிபான்கள் விடுத்துள்ள கடுமையான உத்தரவு!!
ஆப்கானிஸ்தானில் முடிதிருத்துபவர்களிற்கு தாடியை முழுமையாக மழிக்கவோ அல்லது கத்தரித்து அலங்காரம் செய்யவோ கூடாதென தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த விதிமுறையை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தாகவும் கூறப்படும் அதேவேளை, காபூலிலிலும் இதேபோன்ற உத்தரவு தமக்கு வழங்கப்பட்டதாக, சில முடிதிருத்தும் நபர்கள் கூறியுள்ளனர்.
தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, தமது எதிரிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை, நான்கு கடத்தல்காரர்களை சுட்டுக் கொன்றதுடன், அவர்களின் உடல்கள் ஹெராட் மாகாணத்தின் தெருக்களில் தொங்கவிட்டனர்.
இந்நிலையில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள சலூன்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், முடி திருத்துபவர்கள், தாடி தொடர்பான ஷரியா சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தாலிபான் எச்சரித்துள்ளனர். “போராளிகள் தொடர்ந்து வந்து தாடியை வெட்டுவதை நிறுத்துமாறு எங்களுக்கு கட்டளையிடுகிறார்கள். அதை மீறுபவர்களை அடையாளம் காண, தமது ஆட்களை வாடிக்கையாளர்களாக எம்மிடம் அனுப்பலாம் என்று என்னிடம் கூறினார்கள்” என காபூலில் முடிதிருத்தும் நபர் ஒருவர் கூறினார்.
அதேவேளை நகரின் மிகப்பெரிய சிகையலங்கார நிலையத்தை நடத்தும் மற்றொருவர், அரசாங்க அதிகாரி என்று கூறி ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறினார். அவர்கள் “அமெரிக்க பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள்” மற்றும் யாருடைய தாடியையும் ஷேவ் செய்யவோ அல்லது வெட்டவோ கூடாது என அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை 1996 முதல் 2001 வரை தலிபான்களின் முதல் ஆட்சியின் போது, கடுமையான இஸ்லாமியர்கள் ஆடம்பர சிகை அலங்காரங்களை தடை செய்தனர் மற்றும் ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும் 2001 இன் பின், சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட தோற்றம் பிரபலமானதுடன் பல ஆப்கானிஸ்தான் ஆண்கள் நாகரீகமான வெட்டுக்களுக்காக சிகையலங்கார நிலையங்களுக்குச் சென்றனர்.
இவ்வாறான நிலையில் தலிபான்களின் இந்த உத்தரவால் “வாடிக்கையாளர்கள் தங்கள் தாடியை மழிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தெருக்களில் தலிபான் போராளிகளால் குறிவைக்கப்படுவதை விரும்பவில்லை. அவர்கள் தலிபான்களை போல தோற்றமளிக்க விரும்புகிறார்கள். கட்டணங்களை குறைத்த போதிலும், சிகையலங்கார நிலையங்களிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக முடிதிருத்துபவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை