ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழரசுக்கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை – சுமந்திரன்


ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழரசுக்கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய தலைவர் சம்பந்தன் அவர்களின் கையொப்பத்தின் கீழே ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது என கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் நேற்று (09) வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் பொதுமக்களின் காணிகளை வனவள திணைக்களத்தினர் எல்லைப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், “வவுனியா மாவட்டத்திலுள்ள இத்திகுளம் பிரதேசத்திலே நீண்ட காலமாக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவற்றிலே மேய்ச்சல் தரையாக பாவிக்கின்ற பிரதேசங்கள் இருக்கின்றன. முன்னர் அந்த இடத்திலேயே அவர்கள் பயிர் செய்திருக்கின்றார்கள்.

அண்மைக் காலத்திலே சில அரச ஊழியர் என்று சொல்கின்றவர்கள் அங்கே வருகை தந்து அந்தப் பிரதேசத்திலே வன பாதுகாப்பிற்கான கற்களை இட்டு அந்த நிலங்களை அபகரிக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதைப்பற்றி மக்கள் பல இடத்திலே முறைப்பாடுகளை தொடர்ச்சியாக கொடுத்திருக்கின்றார்கள் அந்த வகையில் இதனை எமக்கும் தெரிவித்திருந்தார்கள். நாங்களும் அதனைப் பார்வையிட்டு இருக்கின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோருடன் சென்று பார்வையிட்டுள்ளோம். அதனை ஒரு எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்துவதாக தெரிகின்றது. வவுனியா எல்லைக்குள் இருந்ததை வவுனியா தெற்கு பிரிவுக்குள் இருப்பதாக காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்‌. இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் பிரதேச செயலாளரோடு பேசியிருக்கின்றோம் ‌.

இவ்வாறான விடயம் இனியும் தொடர்ந்து நடைபெறுமாக இருந்தால் நாங்கள் மேலிடத்தில் தெரியப்படுத்தவும் இது தொடர்பாக குரல் எழுப்புவதற்கும் முடிவெடுத்திருக்கின்றோம். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாங்கள் நீண்ட காலமாக யோசித்து வருகின்றோம்.

வன பாதுகாப்பு சட்டத்தின் கீழே வன பாதுகாப்புக்குப் பொறுப்பான உயர் அதிகாரிக்கு வனங்களை பாதுகாக்கும் உரிமை உண்டு. ஆனால் அது மக்களுடைய வாழ்விடங்களாக இருந்தாலும் கூட அவர் அதனை செய்யலாம் ஆனால் அவற்றில் சில சில நடவடிக்கைகளை சட்டம் தடுக்கிறது.

ஆனால் இங்கு மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை இவர்கள் வனப்பாதுகாப்பு என அடையாளப்படுத்திவிட்டு மக்கள் அங்கு வாழ்வதை தடுப்பதற்கான முயற்சிகள் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றதது‌.

ஏற்கனவே பொத்துவில் பிரதேசத்திலே இவ்வாறான வழக்கு ஒன்றிலே நான் ஆஜராகி இருக்கின்றேன். அது தற்பொழுது கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. அதே போன்று மற்ற இடங்களிலும் இவ்வாறான பிரச்சினை தொடருமாக இருந்தால் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலைமைதான் ஏற்படும்.

ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனுடைய தலைவர் சம்பந்தன் அவர்களின் கையொப்பத்தின் கீீழே ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சி, அந்த கூட்டமைப்பாக தான் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். ஏனைய கட்சிகள் வேறாக செயற்பட்டு வருவது தொடர்பாக நாங்கள் அவர்களோடு பேசலாம். ஆனால் தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் கூட்டமைப்பை உடைத்து தனியாக செயற்படவில்லை” என தெரிவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.