ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா


 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நேற்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஷுப்மன் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடியில் 3 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்த வெங்கடேஷ் ஐயர் ராகுல் திவாட்டியா வீசிய பந்தில் பவுல்ட் ஆனார்.

பின்னர் வந்த நிதிஷ் ராணா 12 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3 பவுண்டரிகளை விளாசிய ராகுல் திரிபாதி, 21 ரன்களில் பவுல்ட் ஆனார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஷுப்மன் கில்( 44 பந்துகள், 4 பவுண்டரிகள், 2 சிக்சர்) 56 ரன்களில் கேட்ச் ஆனார்.

இவர்களுக்கு பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 14 ரன்களுடனும், கேப்டன் இயன் மார்கன் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 171 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களில் கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ராகுல் திவாட்டியா மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Image

தொடர்ந்து 172 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (0) – லியாம் லிவிங்ஸ்டன் (6) ஜோடி சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ரன்னுடன் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

சிறிது நேரம் தாக்குப் பிடித்த சிவம் துபே 18 ரன்களுடன் ஆட்டமிழக்கவே பின்னர் வந்த க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகி வெளியேறினர். அணியை கரைசேர்க்க களத்தில் தனி ஒருவனாக போராடிய ராகுல் தேவாடியா 44 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்த போது களத்தில் இருந்த சேத்தன் சகாரியா – முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஜோடியில் சேத்தன் சகாரியா ரன் அவுட் ஆகவே ஆட்டம் முடிவுக்கு வந்தது. நிர்ணயிக்கப்பட்ட 172 ரன்கள் இலக்கை எட்ட தவறிய அந்த அணி 16.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால், பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி சார்பில் துல்லியமான பந்து வீச்சை வெளிப்படுத்திய சிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கடைசி லீக் ஆட்டத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 புள்ளிகள் மற்றும் +0.587 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. மேலும், இந்த அசத்தலான வெற்றியின் மூலம் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கான ரேஸில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் 170+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் நடப்பு சீசனில் இருந்து மும்பை அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.