சர்வதேசத்தில் அடுத்த ஆபத்து!!

 


ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) இல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல்செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முக்கியஸ்தர்களை புலனாய்வு செய்து, உரிய நேரத்தில் கைதுசெய்து, குற்றவிசாரணை செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச, சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலரும் சிறிலங்கா இராணுவத்தின் (SLA) முன்னாள் இராணுவத் தளபதியுமான கமால் குணரட்ண, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரியா, சிறிலங்கா பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்காரவாத விசாரணைப் பிரிவுகளின் (TID) பிரதிப் பொலிஸ்மாஅதிபர் சிசிர மென்டிஸ் உட்பட 2002ம் ஆண்டு முதல் சிறிலங்கா காவல்துறையின் (SLP) பொலிஸ்மா அதிபர்களாகப் பதவி வகித்து வந்தவர்கள் மற்றும் 2002ம் ஆண்டு முதல் சிறிலங்கா காவல்துறையின் விசேட அதிரடிப்படைப்பிரிவின் (STF) கட்டளை அதிகாரிகளாக செயற்பட்டவர்கள் போன்றோர்களின் பெயர்களும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் வாழும் ஏராளமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் ஆகிய செயற்பாடுகள் ஊடாக வலுக்கட்டாயமாக நாடுகடத்தல், தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் பொறுப்பாக இருந்தார்கள் என்ற குற்ற்சாட்டின் அடிப்படையிலேயே அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான 'வெள்ளை வான் கடத்தல்கள்' உட்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிவதில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக, இந்த வழக்கினைத் தாக்கலசெய்த புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட 200 இலங்கைத் தமிழர்கள் சார்பாக Global Rights Compliance LLP (GRC)என்ற சட்டவல்லுனர் அமைப்பினால் ரோமச் சட்டத்தின் 15ஆவது சரத்தின் (Article 7 of the Rome Statute) கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவருக்கு இத்தொடர்பாடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.