இமயமலைக்கு மன்னாரில் இருந்து செல்லும் அதிசய பறவை!

 


மன்னார் வலசைப் பறவையொன்றில் பொருத்தப்பட்ட மின்னணு குறிகாட்டியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வலசைப் பறவை தனது இனப்பெருக்கத்திற்காக இமயமலைகளின் மேலாக பறந்து சென்றமை தெரிய வந்துள்ளது.

brown-headed gull இன பறவையின் பயணப்பாதையில் 18,153 அடி (5,533 மீ) உயரத்தில் பறந்து இமயமலை பகுதியை கடந்துள்ளது. திபெத்திய பீடபூமியின் மேல் பறக்கும் கடைசிப் பாதையில் அது இன்னும் மேலே பறந்து, 21,140 அடி (6,443 மீ) உயரத்தை எட்டியதாக ஆராய்ச்சியாளர் கலாநிதி சம்பத் செனவிரத்ன கூறினார். அப் பறவை கடந்த ஏப்ரல் மாதத்தில் மன்னாரில் கலாநிதி செனவிரத்ன குழுவினரால் பிடிக்கப்பட்டு, மின்னணு குறிகாட்டி பொருத்தப்பட்டது.

மின்னணு குறிகாட்டியானது பறவைகள் பறக்கும் இடங்களின் புவியியல் அடையாளத்தை வெளியிடுகிறது. அதன் சமிக்ஞைகள் செயற்கைக்கோள் மூலம் பெறப்படுகின்றன. குறியிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அப் பறவை இலங்கையை விட்டு வெளியேறி அதன் இனப்பெருக்கம் செய்யும் இடத்தை நோக்கி வடக்கு நோக்கி பறக்கத் தொடங்கியதாகவும், அந்த பாதையில், பறவை ஏற்கனவே சில முறை பயணம் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில், மின்னணு குறிகாட்டி மூலம் அதன் பயணப்பாதை பதிவாகியுள்ளது. தரவுகளின்படி, மனாஸ்லு (8,163 மீ) மற்றும் நெம்ஜங் (7,140 மீ) மலைகளுக்கு இடையே பறந்து, மே முதல் வாரத்தில் திபெத்திய பீடபூமியில் இனப்பெருக்கம் செய்ய குடியேறியது.

அதாவது, 35 நாட்களில் 8,000 கிலோமீற்றர்கள் பயணம் செய்து, இனப்பெருக்கம் செய்யுமிடத்தை அப்பறவை சென்றடைந்தது. இமயமலை, 8,849 மீ உயரமான எவரெஸ்ட் மலைத்தொடர்களுடன், உலகின் கூரை என்று அழைக்கப்படுகிறது. கடுமையான காற்று, குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த ஒட்சிசன் அளவுகள் அங்கு உயிர்வாழ்வதை சவாலாக்குகின்றன.

எனினும், அப் பறவை, சவாலான சூழலிற்குள் பயணம் செய்துள்ளது. இதேவேளை இமயமலை முழுவதும் இந்த வகை பறவைகள் பறப்பதை பறவையியல் வல்லுநர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர்.

மிக சமீபத்தில், டெமோயிசெல் கிரேன் மற்றும் ஸ்டெப்பி கழுகு ஆகியவற்றின் பயணப்பாதை மின்னணு குறிகாட்டி மூலம் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. brown-headed gull பறவையின் பயணப்பாதை மின்னணு பயணப்பாதை மூலம் மூன்றாவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதி செனவிரத்ன கூறினார்.

மேலும் அப் பறவை தற்போது இலயமலையிலிருந்து இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கலாநிதி செனவிரத்ன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.