திடீரென சூரியனில் எழுந்த பெரும் கதிர் வீச்சு!!
நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி கண்டுபிடித்துள்ள தகவல்படி, சூரிய வெப்ப கதிர் வீச்சு அதிகரித்திருப்பதாகவும், சனிக்கிழமையான நாளை இந்த தாக்கத்தால், ஜிபிஎஸ் தொடர்பில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
சூரியன் என்பதே வெப்ப கதிர்கள் நிரம்பிய ஒரு பிரமாண்ட நட்சத்திரம்தான். ஆனால், அதில் இருந்து வெளியாகும் கதிர்களின் வீச்சு வேறுபாடு சில மாறுதல்களை பூமியில் ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இப்போது அப்படியான வேறுபாட்டை நாசா சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சிஸ்டம் கண்டு பிடித்துள்ளது.
இந்த புகைப்படத்தை நாசா தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. சூரியன் தனது சக்தி வாய்ந்த கதிர்வீச்சுகளை வெளிப்படுகிறது என்று நாசா, புகைப்படத்தில் தெரிவித்துள்ளது. சூரியனின் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு சில இடங்களில் மட்டும் தங்க நிறம் கூடுதல் வெளிச்சத்தோடு காணப்படுகிறது. அது மின்காந்த அலை காரணமாக உருவானது என்று தெரிகிறது. இந்த கதிர்வீச்சின் தாக்கம் நாளை பூமியில் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பயணம் செய்து, பூமியை வந்தடைவது அக்டோபர் 30ம் தேதிதான்.
சூரியன் வெளியேற்றியுள்ள இந்த X1 வகை, கதிர்வீச்சு, பூமியின், காந்த புலனை சனிக்கிழமை பாதிப்பு ஏற்படுத்தச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகை கதிர்வீச்சு தற்காலிகமாக ஏற்படுகிறது. அதேநேரம், வலுவான ரேடியோ அலைகளை உருவாக்குகிறது. தெற்கு அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்று, அமெரிக்க வானிலை கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
SpaceWeather.com வெளியிட்டுள்ள செய்தியில், இதுபற்றி கூறுகையில், சூரிய வெப்ப கதிர் வீச்சு, பிளாஸ்மா சுனாமியை ஏற்படுத்துகிறது. பிளாஸ்மா அலை என்பது 1 லட்சம் கி.மீ உயரம் கொண்ட அமைப்பு. இந்த பிளாஸ்மா அலை, சூரியனின் வளிமண்டலத்தில் 1.6 மில்லியன் மைல் வேகத்தை விட வேகமாக நகர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
சூரிய கதிர்வீச்சு ரொம்பவே பலமானது கதிர்வீச்சு அபாயம் கொண்டது. ஆனாலும், அந்த கதிர்வீச்சு பூமியின் வளிமண்டலத்திற்குள் புகுந்து, மனிதர்களை நேரடியாக பாதிக்காது. ஆனால், வளிமண்டலத்தின் சூழலை பாதிக்கக் கூடும். இதன் மூலம், ஜிபிஎஸ் உட்பட தகவல் தொடர்பு சிக்னல்களில் பாதிப்பு ஏற்படக் கூடும்.
எக்ஸ்- கிளாஸ் மிகவும் தீவிரமான கதிர்வீச்சுகளை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை என்று நாசா தெரிவிக்கிறது. அதே நேரத்தில் எக்ஸ் உடன் குறிப்பிடப்படும் நம்பர்கள் கதிர் வீச்சின் வலிமையைப் பற்றிய கூடுதல் தகவல்களை கொடுக்கிறது. X2 என்பது X1 விட இரண்டு மடங்கு தீவிரமானது. X3 என்பது மூன்று மடங்கு தீவிரமானது. இதுதான் குறியீடு ஆகும். நாளை எக்ஸ் 1 வகை கதிர்வீச்சுதான் தாக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை