குக்கரில் டேஸ்டியான புளி சாதம்!!


 தேவையான பொருட்கள்:

அரிசி – 21/2 கப்,
புளி – எலுமிச்சை பழ அளவு,
வர மிளகாய் – 10,
பூண்டு – 10 பல்,
தனியா – 11/2 ஸ்பூன்,
வெந்தயம் – 1/2 ஸ்பூன்,
வெள்ளை எள் – 1/2 ஸ்பூன்,
மிளகு – 1/2 ஸ்பூன்,
கருவேப்பிலை – ஒரு கொத்து,
எண்ணெய் – 100 கிராம்,
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,
கடுகு – 1/2 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்,
வேர்க்கடலை – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


குக்கரில் புளி சாதம் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசியை நன்றாக அலசிக்கொள்ளவும். பிறகு அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இதே போல் புளியையும் 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.

இதன் பிறகு, ஒரு கடாய் எடுத்து சூடானதும் அதில் வெந்தயம் மற்றும் மிளகு சேர்த்து சில நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றுடன் தனியா, எள், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் வறுத்துக்கொள்ளவும். இவை நன்கு ஆறியதும் மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து, அடுப்பில் ஒரு குக்கர் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். அவை காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இவற்றுடன் வேர்க்கடலை, கறிவேப்பிலை மற்றும் பூண்டை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு வதக்கிக் கொள்ளவும்.

இவை நன்கு சிவந்து வதங்கியதும், அவற்றுடன் புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும். அதன் பின்னர் அரிசி வெக்கத்தேவையான தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளவும். (2 1/2 டம்ளர் அரிசிக்கு 5 டம்ளர் அளவு தண்ணீர் போதுமானது)

இந்த தண்ணீருடன்மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து குக்கரில் உள்ள புளி கரைசல் நன்கு கொதித்தவுடன் அவற்றுடன் முன்னர் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் அடிக்க விடவும்.

இப்போது குக்கரில் இருந்து பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து ஒரு கரண்டியால் சாதத்தை மிக்ஸ் செய்து விட்டால் நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் அட்டகாசமான புளியோதரை சாதம் தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.