ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள் - நூல் பார்வை!!

 


என் பிரிய பொண்டாட்டிக்கு...’


- இந்த வாசகத்தைப் படித்த பின்புதான் கவிதைகளுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது...

“கண்டதும் காதல் தொற்றிக் கொள்ளும்” என்று சொல்வது உண்மைதான். காதல் தொற்றிக் கொள்ள ஒரு கணத்தைவிடக் குறைவான நேரமே போதுமாம். தனக்கு விருப்பமான மற்றும் பொருத்தமான நபரைப் பார்க்கும், அரை வினாடிக்குள்ளாகவே மூளையில் காதலைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்துவிடுவதாகவும், அந்தச் சில வினாடிகளில் மூளையில் நிகழும் மாற்றங்களைப் படம் பிடித்துப் பார்த்த போது, மூளையின் 12 இடங்களில் காதல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது அறியப்பட்டது. அன்புக்குரிய அல்லது ஈர்ப்புக்குரியவரை காணும் போது நரம்புக் கடத்திகளுக்குப் புது ஊக்கம் கிடைக்கிறது. ஆக்சிடோசின், டோபமைன், வாசோபிரெசின் மற்றும் அட்ரினலின் போன்ற ரசாயன திரவங்கள் சுரந்து உடல் முழுவதும் பரவசம் கலந்த உணர்வைப் பரவச் செய்து சிலிர்க்கச் செய்கிறது. ஏறத்தாழ மெய்மறந்த நிலைக்கு தள்ளுகிறது இந்த மாற்றங்களை ஒப்பிட்டுச் சொல்வதானால் தேன் உண்ட வண்டின் நிலையும், பறப்பதைப்போல உணரும் போதையும் முதல் பார்வை கலப்பதிலேயே ஏற்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு.

காதல் வயப்பட்டு விட்ட நிலையில், அவர்களுக்குள் கவிதைகளும் தாராளமாகச் சுரக்கும் போலிருக்கிறது. இங்கு கவிஞர், தனக்குரியவளை மிகவும் நேசித்துக் கவிதைகளை எழுதிக் குவித்திருப்பார் போல் தெரிகிறது. இந்நூல் முழுக்க, அவரது கடுமையான காதல் காய்ச்சல் வெளிப்பட்டிருக்கிறது.

’ஒரு காதலை சத்தமில்லாமல்
காதலிக்க ஆசைப்படுகிறது
பாழாய்ப் போன மனசு’

‘எனக்கும் அவளுக்குமான இடைவெளியில்
நிதானமாக என் கவிதைகளை
வாசித்துக் கொண்டிருந்தது வானவில்’

‘ஒப்பனை இல்லாத அறைக்குள் இருந்து
சிணுங்கும் அவள் கொலுசுகளில்
சிக்கிக் கொண்டிருந்தது என் காதல்...’

என்பது போன்ற பல காதல் வரிகள் கவிதைக்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்கின்றன.
கவிஞருக்கு ‘முத்தம்’ மிகவும் ‘பிடிக்கும்’ போலிருக்கிறது. கவிதைகளில் தாராளாமாக ‘முத்தம்’ கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.

இந்நூலிலுள்ள கவிதைகளில் ‘முத்தம்’ இல்லாத கவிதைகள் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

‘அவள் முத்தமிட்ட என் கவிதைகளை கிழித்து
கப்பலாக்குகிறேன் அமர அடம்பிடிக்கிறாள்
நான் மூழ்க ஆரம்பிக்கிறேன் நிதானமாக...’

‘நீங்கள் முத்தச்சத்தம் கேட்டால்
நான் கவிஞனாகிக் கொண்டிருக்கிறேன்
என்று அர்த்தம்’

என்று முத்தத்தின் வழியாகவும் பல அர்த்தத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்.

காதல் உணர்வுகளைக் கவிதைகளாக்கிப் படைத்திருக்கும் கவிஞரின் பல கவிதைகளில் குறிப்பிட்ட சில வரிகள் மீண்டும் மீண்டும் தொற்றிக் கொண்டு வந்து விடுவதால், முதலில் படித்த கவிதை போலிருக்கிறதே என்று சிறு நெருடலை ஏற்படுத்துகிறது. இக்குறையினைத் தவிர்த்திருக்கலாம்...!

கவிதைகள் அனைத்தையும் முழுமையாகப் படித்து முடித்த பிறகுதான், முன் பக்கத்திலிருந்த ‘என் பிரிய பொண்டாட்டிக்கு...’ என்ற வாசகம் இல்லாமலிருந்திருந்தால் கவிஞரின் பாடு மிகவும் திண்டாட்டமாகி இருக்கும் என்று எண்ணத் தோன்றியது.

- தேனி மு. சுப்பிரமணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.