வீரசபதமிட்ட ஈழநிலம்!!
வழமை போலல்லாது
இம்முறை தாய்மார்களின் கண்களிலிருந்து கண்ணீருக்குப் பதிலாக நெருப்புக் கொட்டியதைக் காண முடிந்தது
குழந்தைகளின் கரங்களில் ஒளி தீபம் புரட்சிச் சுவாலை ஆனதைக் காணமுடிந்தது
மாட்டை நீளமாய்க் கட்டினால் அது
அது பாட்டுக்கு மேய்ந்துவிட்டு படுத்திருக்கும்
இறுகக் கட்டினால் புற்கள் செறிந்திருந்தாலும் அறுத்துப் போட்டே மேயும்
காரணம் அது தன்னை யாரோ அடக்குகிறார்கள் என உணரும்
அடக்குமுறை வரும்போதுதான் வெடிப்புகளும் பிளவுகளும் பேருருவம் பெற்று போர் தன் வாயை அகலத் திறக்கும் என்ற கோட்பாட்டுக்கிணங்க
இம்முறை மாவீரர் நாள் உணர்த்துவது என்ன
முள்ளிவாய்க்காலுக்கு முன் உலகத் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை துயிலுமில்லங்களில் புனிதப் பூசை செய்து கண்ணீரைக் காணிக்கையாக்கி கவலையைத் தூக்கி வைத்து பிள்ளையருடன் அழுது தீர்த்து புரட்சி அடைந்தனர்
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் உடைக்கப்பட்ட கற்துகள்களுடன் புதையுண்ட நிலத்தில் கிளறப்பட்ட புனிதக் குழிகளில் படிந்துள்ள மண்ணுடன் கார்த்திகைத் தீபமெற்றி ஆராதித்தனர்
இம்முறை அதுவுமில்லை
மாட்டை இறுகக் கட்டுவது போல் மக்களின் மனதுள் அழும் கண்ணீரை இறைக்க வேண்டாமெனக் கட்டளை பிறப்பித்தனர் கறுத்த மிருகம்போல் வீதிகளில் பயமுறுத்தும் சீயப் படைகள்
மாடு தன் கட்டை அறுக்கத் துணிந்ததோ அதற்கான தொடக்கமோ என எண்ணத்தோன்றுமாறு மாவீரர் நாள் உலகெங்கும் சுடரத் தொடங்கியது
தமிழர்களின் அரச தலைவர்கள் கூட செய்வதறியாத கையறு நிலையில் முகநூலில் விளக்கைக் கொழுத்திய போதும்
எந்தத் துணையுமின்றி வழிப்படுத்தலுமின்றி
மக்கள் வீதியில் இறங்கினர்
இனி தமிழ் அரசியல் வாதிகளும் மக்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்
குழந்தைகள் உட்பட முதியோர்களும் கொட்டும் மழையிலும் கொட்டு முரசை என்றவாறு தீபங்களை ஏற்றினர்
ஆயிரம் கருமுகில் மறைப்பினும் ஆதவன் உதிப்பான் என்பது போல்
பெரு நம்பிக்கை சுவாலைகளில் சுடர்விட்டது ஈழ தேச தெருக்கள் வயல் மற்றும் பொது மைதானங்கள்
வானிலிருந்து எரிசாம்பல் கொட்டினாலும் ஈழத் தமிழனின் தட்டுங்கர ஓசை குறையாது என்ற நம்பிக்கை பற்றி எரிந்து சுவாலித்ததாக காட்சி அளித்தது
ஆயிரம் யூதர்களை விட இலட்சம் இஸ்ரவேலை விட தமிழர்கள் இன்னுமின்னும் மேலெழுந்து தமது தேசச் சுதந்திரத்தை நிறுவுவார்களெனச் சொல்லிச் சென்றது இந்தக் கார்த்திகை நாள்
இதனை நெஞ்சுலேற்றி கரங்கள் கோர்த்து எழுவோம்
கல்லறையிலிருந்து எட்டிப் பார்க்கும் என் நட்சத்திர நாயர்க்கு நாம் செய்யும் வீர சபதமும் இதுவாகத்தான் இருக்கும்
கருத்துகள் இல்லை