ஆயர் மன்றம் விடுத்துள்ள விளக்கம்!!


 சர்ச்சையை தோற்றுவித்த நவம்பர் மாதம் 20ஆம் திகதியை இறந்தவர்களுக்காக மன்றாடும் சிறப்பு நாளாக வட கிழக்கு ஆயர் மன்றம் விடுத்த அறிக்கை தொடர்பாக, ஆயர் மன்றம் விளக்கம் கொடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நவம்பர் மாதம் 20ஆம் திகதியை இறந்தவர்களுக்காக மன்றாடும் சிறப்பு நாளாக வட கிழக்கு ஆயர் மன்றம் விடுத்த அறிக்கை தொடர்பாக பல வாதங்களும் பிரதி வாதங்களும் விமர்சனங்களும் அறிக்கைகளும் கண்டனங்களும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எமது அந்த அறிக்கையை முழுமையாகப் படிக்காமலும் தெளிவாகப் புரியாமலும் இவை நடக்கின்றன என்றே நாம் நம்புகிறோம். அறிக்கையில் மாவீரர் தினத்தை மாற்றும்படி யார் கோரியது? எங்கு கோரப்பட்டுள்ளது? எங்கும் கோரப்படவில்லை.

மாவீரர் தினம் வேறு தினம். இது வேறு தினம். அதோடு தமிழர் தினம் என்றோ தமிழ் தேசியம் என்றோ போராளிகள் என்றோ எதுவும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இறந்த அனைவர் தினம் என்னும் போது இலங்கை மண்ணில் போரினால் இறந்த அனைத்து இன மத மக்களையும் எந்த பேதமின்றிக் குறிக்கிறது.

நவம்பர் மாதம் இறந்தோரை நினைவு கூரும் மாதமாக காலாதி காலமாக உலகக் கத்தோலிக்க திருச்சபையில் நினைவு கூரப்பட்டு வருகிறது. அதன்படி இந்த நவம்பர் மாதத்தில் 2ஆம் திகதி இறந்த ஆத்துமாக்கள் தினம் முதல் பல இறந்த தினங்கள் நினைவு கூரப்படுகிறது.

இறந்த ஆயர்கள் தினம் – இறந்த குருக்கள் தினம் எனப் பல தினங்கள் உண்டு. கத்தோலிக்க மக்கள் இம்மாதத்தில் பணம் செலுத்தி பூசை ஒப்புக் கொடுத்து அன்னதானம் செய்து தமது குடும்பத்தில் இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கு ஒரு தினம் ஒதுக்கி செபிக்கின்றனர்.

நவம்பர் மாதத்தில் 20ஆம் திகதியை போரினால் இறந்த அனைவருக்காகவும் மன்றாடும் தினமாக கத்தோலிக்க மக்களுக்கு மட்டும் வேண்டுதல் விடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மற்றவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. அதேவேளை நவம்பர் 21ஆம் திகதிதான் மாவீரர் வாரம் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குறித்த அழைப்பு தொடரவிருக்கும் மாவீரர் வாரத்தை தொடக்கி வைத்து அத்தினத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது என்பது ஏன் உணரப்படவில்லை எனவும் ஆயர் மன்றத்தால் கேள்வி எழுபப்பட்டுள்ளது.

அதோடு அறிக்கையை முழுமையாகப் படியுங்கள். அதாவது இலங்கைத் தேசத்தில் நடைபெற்ற கொடிய போரினால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்களாகிய நாம் நவம்பர் மாத்தில் வருகின்ற மூன்றாம் சனிக்கிழமையைத் தீர்மானித்துள்ளோம்.

இதற்கெனக் குறிப்பிட்ட இடமும் இல்லை, நேரமும் இல்லை. அன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் ஈடுபடவும் இல்லங்களில் தீபம் ஏற்றி இறைவேண்டல் புரியவும் அன்போடு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இறுதியில் இந்த அழைப்பை வடக்கு-கிழக்கு கத்தோலிக்க ஆயர்களாக நாம் எம் மக்களுக்கு விடுத்தாலும் சமயங்களைக் கடந்து அனைத்து சமயத் தலைவர்களையும் தமிழ்கூறும் நல்லுலகையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்.

மேலும் எமது இந்த முன்னெடுப்பு வெற்றியளிக்க அனைவரது ஆதரவையும் வேண்டி  நிற்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.