சபர் கட்டை - குட்டிக்கதை!!


ஒரு ஆடம்பரமான மன்னனுக்கு மூன்று பெண்கள். இளைய பெண்கள் இருவரும் அரச குடும்பத்துக்கு ஏற்பப் பகட்டு வாழ்க்கை வாழ, மூத்தவள் மட்டும் சதா சர்வகாலமும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொண்டு, மிக எளிமையாக வாழ்ந்து வந்தாள். அவள், எந்தச் சூழ்நிலையிலும் சலனப்படாத பொறுமையானவள்.

மூத்த மகளின் எளிமையாலும், பொறுமையாலும் எரிச்சலாகும் மன்னன் அவளை அரண்மனை வாழ்க்கைக்கு ஒத்துவராதவள் என்று ஊருக்கு வெளியேக் குடிசை ஒன்றில் வசிக்க அனுப்பிவிடுகிறான். அவளும் மறு சொல் பேசாமல் பொறுமையுடன் அங்கு இறைவனைத் தொழுதவாறு தன் வாழ்க்கையைக் கழிக்கிறாள்.

புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்படும் மன்னன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தன் இளைய மகள்கள் இருவரிடமும் என்ன கொண்டு வர எனக் கேட்கிறான்.

அவர்களும் விலை உயர்ந்த, அரிதான பரிசு பொருட்களை வாங்கி வருமாறு வேண்டுகிறார்கள். புனித யாத்திரைக்காக மன்னன் கப்பல் ஏறும்போது ஒரு தடங்கல். காற்று இருந்தும், பாய்மரம் விரித்தும் கப்பல் நகரவில்லை.

கலங்கும் மன்னன் அரண்மனை முதியவரிடம் ஆலோசனை கேட்க, “மூத்த மகளிடம் சொல்லாமல் கிளம்புவதை இறைவன் ஏற்கவில்லை” எனக் கூறுகிறார்.

மன்னனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சேவகனை அழைத்து, தான் புனித யாத்திரை போவதை மகளிடம் கூறிவிட்டு அவளுக்கும் என்ன வேண்டும் எனக் கேட்டுவருமாறு அனுப்புகிறான்.

அந்தச் சேவகன் மூத்த இளவரசியின் குடிலுக்குச் செல்லும் சமயத்தில் அவள் தொழுகையில் இருக்கிறாள்... சேவகனுக்கோ அவசரம் !

வந்த விசயத்தை அவன் கூற... தொழுகையை நிறுத்தாமலேயே "சபர்.. சபர்... ! " எனக் கூறுகிறாள் இளவரசி.

அவன் மீன்டும் என்ன வேண்டும் எனக் கேட்க, மீன்டும் சபர் என்ற வார்த்தையே பதிலாக வருகிறது.

அலுப்புடன் மன்னரிடம் திரும்பிய சேவகன், “இளவரசியாருக்கு சபர் கட்டை ஒன்று வேண்டுமாம்” என்கிறான்.

மன்னனும் தலையில் அடித்துக்கொண்டு “சரி” என்று சொல்ல, கப்பல் கிளம்புகிறது.

புனித யாத்திரையின் சடங்குகள் முடித்த மன்னன், தன் இளைய பெண்கள் இருவரும் கேட்டது அனைத்தையும் வாங்கிக் கொண்டு பயணம் திரும்பும் போது, மீண்டும் அதே சோதனை, கப்பல் நகரவில்லை.

அப்போதுதான் மூத்த மகள் கேட்ட சபர் கட்டையின் ஞாபகம் வருகிறது. அதனை வாங்க ஒரு ஆளை அனுப்ப, நகர் முழுவதும் கேட்டலைந்தும் அப்படி ஒரு கட்டை கிடைக்காததால் அலுத்து போன அவன் ஒரு சவுக்குக் கட்டையைக் கொண்டு வந்து இதுதான் சபர் கட்டை எனக் கூறுகிறான்.

நாடு திரும்பிய மன்னன் சபர் கட்டையை, என்ன வேண்டும் எனக் கேட்டு அனுப்பிய அதேச் சேவகனிடம் மூத்த மகளுக்கு அனுப்புகிறான்.

இதோ நீங்கள் கேட்ட சபர் கட்டை என நீட்டும் சேவகனை பார்த்து சிரிக்கிறாள் அந்தப் பெண்.

"தொழுகையில் இருந்த என்னை அவசரப்படுத்தியதால், பொறுமையாக இரு என்னும் பொருளில் சபர் என்றேன். நீயோ அவசரமாய்ப் போய்ச் சபர் கட்டை கேட்டதாகச் சொல்லிவிட்டாய்... சரி, அப்படி வைத்துவிட்டுப் போ!" எனக் கூறினாள்.

அவனும் அந்தக் கட்டையைச் சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்பிச் சென்றான்.


அந்த மூத்த இளவரசி தொழுகை முடித்து, எனக்கு ஒரு சிறந்த கணவனைக் காட்டு என இறைவனிடம் இறைஞ்சி கேட்டுக் கண் திறக்கும் போது, அந்தச் சவுக்குக் கட்டை பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரன் வெளிப்பட்டான்.

பின்னர் அவனையே அவள் மணமுடித்துக் கொண்டாள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.