பள்ளிகளில் பாலியல் வன்முறை - சரவணன் சந்திரன் !!

 


நல்லவன், கெட்டவன் என்கிற இருமைக்குள் மட்டும் ஒரு விவகாரத்தை நிறுத்தி உணர்ச்சி வேகத்தில் கடப்பது, எந்த ஒரு சமூகத்திற்கும் நல்லதல்ல. ஆங்கிலச் சொல்லாடல் ஒன்று உண்டு. கறுப்பு, வெள்ளை என இரு நிறங்களுக்கு இடையே ஏராளமான வண்ணங்கள் உண்டென. பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை முன்னிறுத்தி நம்முடைய கல்விச் சாலைகளுக்குள்ளும் அது சார்ந்த வெளியிடங்களிலும் உண்மையிலேயே என்ன நடக்கிறது என உடைத்துப் பேச வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறோம். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தின்போதும் இப்படித்தான் ஒரு அலை எழுந்து அடங்கியது.


ஒரு குற்றம் நடந்தால், அது தொடர்பான சுற்றளவில் நடந்த எல்லாவற்றையும் தொகுத்துப் பார்ப்பதே நல்ல ஒரு சமூகத்திற்கான முதல் படி. இந்த அமைப்பைப் பந்தைப் போலக் கருதிக் கையில் வைத்து உருட்டிப் பார்க்கிற மாதிரி. அப்போதுதான் அதிலுள்ள மேடு பள்ளங்கள் அத்தனையும் நுணுக்கமாகத் தெரியும். மாறாக ஒரு சம்பவத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மேலே சொன்ன மாதிரி இருமைக்குள் நின்று ஒரு விவகாரத்தை அணுகுவது என்பது அதன் வேரைத் தொடுகிற முயற்சி அல்ல. அதனால் எவ்விதப் பயனும் ஆழமாக ஏற்படுவதில்லை. சிறை, மீடியா துரத்தல் எனக் கொஞ்ச காலம் பயம் முந்திக்கொண்டு வந்து நிற்கும். நாளடைவில் பயமுமே ஒரு பழக்கமாகிவிடும். அதை மீறி நடக்க உள்ளம் தெம்பு பெற்றுவிடும்.

இந்த நிமிடத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிக்கி சிறை சென்று மீண்டவர்களைப் போய்ப் பாருங்கள். நான் சொல்வதன் அர்த்தம் விளங்கும். கன்னியாகுமரியில் பல மாணவிகளின் வாழ்க்கையைச் சீரழித்ததாகச் சொல்லப்பட்ட அந்த இளைஞன், நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்தபடி ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பார்த்து, எவ்வித அச்சமும் இல்லாமல் விரலை நீட்டி ஒரு சைகை காட்டினானே, அது ஞாபகம் இருக்கிறதா? ஆகவே இங்கே அது இப்படித்தான் இயல்பாக இருக்கிறது. நாம் அதைப் பற்றியே பேசித் தீர வேண்டியிருக்கிறது.

தொழில்நுட்ப யுகத்தின் தத்துப் பிள்ளைகள்


ஒட்டுமொத்த இந்தக் கல்வி அமைப்பையும் ஒரு பந்தை உருட்டுவதைப் போல உருட்டிப் பார்த்தால், அத்தனை நுணுக்கமான வரிகள் அதன் மேல் இழையோடுகின்றன. எனக்குத் தெரிந்த பள்ளிப் பையன் ஒருவன், எந்தவித மட்டும் மரியாதையும் தெரியாமல் வளர்ந்தவன். “என்ன ப்ரோ. சில் அவுட்டே இல்லையா கடைலயே இருக்கீங்க” என்பான். அவனிடம் அவன் பயிலும் பள்ளி மட்டத்தில் என்ன நடக்கிறது என விசாரித்துத் தெரிந்துகொள்வேன். “பார்த்துடா சிக்கல் ஆயிடப் போகுது” என்றேன் ஒருதடவை அவனிடம். அவனை அது சம்பந்தமாகக் கண்டிக்கிற இடத்தில் எல்லாம் நான் இல்லவே இல்லை.அவனுடைய பெற்றோரே அவ்விடத்தில் இல்லை என்கிற போது, நானெல்லாம் எம்மாத்திரம்?

“அவளோட மை காலண்டர எடுத்துப் பார்த்துக்குவோம் ப்ரோ. அதுல ப்ரக்னன்ஸி வர்ற வாய்ப்பில்லாத டேட்ஸ அதுவே காட்டித் தந்திடும்” என்றான். அவன் சீக்கிரமே வெந்த சோற்றுப் பருக்கை. பள்ளி மட்டங்களில் கிடைக்காத போதையில்லை இப்போதெல்லாம். “ரோலிங் பேப்பர் ஒண்ணைக் கொடுத்திட்டு கையைத் தடவிட்டு வரலாம்” என்றார் போதை வியாபாரி ஒருவர். போகிற போக்கில் இந்த இரண்டு விஷயங்களையும் தொட்டுச் சொல்லிவிட்டுக் கடக்கிறேன். இதன் ஆழ, அகலங்களை நீங்களே இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.
ஆசிரியரைக் கத்தியால் குத்திக் கொன்ற மாணவன், வேட்டி அவிழ போதையில் மல்லாந்து கிடந்த தலைமையாசிரியர், மாணவனோடு ஓடிய பள்ளி ஆசிரியை, காதலனோடு சேர்ந்து தலைமையாசிரியரைக் கொன்ற பள்ளி ஆசிரியை, மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு போதை சப்ளை செய்த கல்லூரி மாணவர்… நாளிதழைத் திறந்தால் இந்த வகைமைகளில், ஏதாவது ஒரு செய்தி கண்ணில் தட்டுப்படாமல் இருக்கவே செய்யாது. அது தொடர்ச்சியான செயல்பாட்டைப் போல இங்கு இலகுவாக மேற்கொள்ளப்படுவது. இந்த இலகுவானது என்கிற சொல் நிச்சயம் தொந்தரவு செய்வதாகவே அமைய வேண்டும்.

ஆக, இது உலகளாவிய போக்கும் பிரச்சினையும். இங்கும் துப்பாக்கி கிடைக்கத் துவங்கும்போது அதுவும் நடக்கும். கவலை வேண்டாம், பொறுத்திருப்போம் அதைக் காண.

இங்கே அது ஒரு தீவிர, சமூகக் கட்டுப்பெட்டித்தனத்தோடு இணைந்து கை கோர்த்திருக்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம். ஆழமாக யோசித்துப் பார்த்தால், நாம் உண்மையில் மிரட்சியில் இருக்கிறோம். அதில் இருந்தே நம்முடைய எதிர்வினைகள் எழுகின்றன. குழந்தை வளர்ப்பில் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கிறோம். தொழில்நுட்பம் சார்ந்த தலைமுறை நிகழ்த்தும் இது போன்ற மீறல்களை, மூடுண்ட சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளுமோ, அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.

இக்கல்வி அமைப்பில் இப்போது நிகழ்வனவற்றிற்கு யார் பொறுப்பு? பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாறி மாறிக் கைகாட்டுகிறார்கள். இப்போது போதாத குறைக்குப் பள்ளி, கல்லூரி மட்டங்களில் இளைய ஆசிரியர்கள் நிறையப் பேர் பணிபுரியப் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுமே இந்தத் தொழில்நுட்ப யுகத்தின் தத்துப் பிள்ளைகளே. இப்போது மீறலை நிகழ்த்தி இருக்கிற ஆசிரியர் உட்பட அவர்கள் எல்லாம் எந்த அமைப்பில் இருந்து எழுந்து வந்தவர்கள்?

எது சுதந்திரம்?
அவர்கள் எல்லோரும் இணைந்து காட்டுகிற காட்சிகள்தான் இவையெல்லாம். அதை எவ்வாறு அடிப்படையிலிருந்து களைவது? அல்லது ஒரு அளவிற்காவது தடுத்தாட் கொள்வது எப்படி? இக்கேள்விகளோடு சேர்த்து, இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் எதற்காக ஒரு மாணவனுக்கு வாங்கித் தரப்படுகிறது என்கிற அடிப்படைக் கேள்வியைக் குடும்பத்தை நோக்கியும் வீச வேண்டியிருக்கிறது. பைக்கிற்கும் இவ்வாறான சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? அது ஒரு குறியீடுதான். தலைதெறிக்க ஓட்டுகிற வேகத்தின் குறியீடு. சாலையில் மோதி மூளை சிதற வாழ்வைத் தொலைக்கத் தயாராக இருப்பதன் அடையாளம்.

தொழில்நுட்ப யுகம் தரும் கட்டற்ற சுதந்திரத்தின் ஆழமான வேர்கள் வீட்டிலிருந்தே துவங்குகின்றன. தட்டிப் பறித்தாவது எதையும் பெற்றுவிடும் மனநலம் கூடிய குழந்தைகளைத்தான் நாம் உற்பத்தியும் செய்துகொண்டிருக்கிறோம். பள்ளிகள், கல்லூரிகள் என்பதெல்லாம் அவற்றின் நீட்சிதான். பள்ளிகள் மட்டத்தில் கொஞ்சம் கண்டிப்பிருக்கும், அதுதான் சிறிய வேறுபாடு. கிராமப் பள்ளிகளில் இது மாதிரியான மீறல் போக்கு இலைமறை காயாக ஊடாடும். ஆனால் அங்கே சாதி சம்பந்தமான மீறல்கள் வெளிப்படையாக நடப்பதுண்டு. அதேசமயம் அங்கேயும் தொழிநுட்ப யுகம் தன் கால்களை ஆக்டோபஸ் மாதிரி ஏற்கனவே பரப்பத் துவங்கிவிட்டது என்பதையும் உற்றுக் கவனிக்க வேண்டும்.

நகரப் பள்ளிகள் இந்த யுகச் சுழற்சியில் அழுத்தமாக மாட்டிக்கொண்டுவிட்டன என்பதை ஆழமாக உணர வேண்டும். இந்த நேரத்தில் எது சுதந்திரம் என்கிற அடிப்படைக் கேள்வியை மாணவர்களை நோக்கி வீச வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னால் குடும்பம் என்கிற அமைப்பை நோக்கி. பள்ளிகள், கல்லூரிகள் மட்டத்தில் நடைபெறுகிற எல்லா விதமான மீறல்கள் குறித்தும் வெளிப்படையாக உடைத்துப் பேச வேண்டும். மறைத்து வைத்திருப்பதாலேயே ஒரு விஷயம் இல்லை என்று ஆகிவிடாது. உள்ளங்கையை நுகர்ந்து பார்த்தால்தான், மணமறிந்து அதைச் சுத்தப்படுத்த இயலும். மாறாக, அதை மடக்கி உள்ளுக்குள் மறைத்து ஒன்றுமில்லை என்று சொன்னால் அதனால் யாருக்கு என்ன நஷ்டம்?

கல்வி அமைப்பு மட்டத்தில் நிகழும் இது சம்பந்தமான விவகாரங்களின்போது சொல்கிற யோசனைகள் எல்லாம் கொஞ்சம் பிற்போக்குத்தனமாக இருக்கும். ஆனால் சமூகமே அவ்வாறாகத்தான் இருக்குமெனில், அவ்வித யோசனைகளை முன்னெடுப்பதிலாவது ஆர்வம் செலுத்தலாமே என்கிற கேள்விதான் இப்போது உள்ளுக்குள் எழுகிறது.

மாணவர்களின் உலகத்திற்குள் அடிக்கடி நுழைந்து வெளியேறுகிறவன் என்கிற அடிப்படையில் சொல்கிறேன். அவ்வுலகம் எல்லா விதமான நுகர்வு சம்பந்தமான குழப்பங்களிலும் சிக்கித் தத்தளிக்கிறது. குழந்தைகள் கையில் இருக்கிற பலூன்தானே என சாதாரணமாகக் கண்டும் காணாமல் கடக்கிற நிலையில் இப்போதில்லை நாம். அதைத்தான் இச்சம்பவமும் உணர்த்துகிறது. வீங்கி வெடிக்கிற தறுவாயில்தான் இருக்கிறது அந்த பலூன்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.