கண்ணன் கதை கேட்டால் ஆத்மஞானம்!!


கண்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்? என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது.

மந்திரியிடம் இதுபற்றி கேட்டான்.

"என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா?" என்றார் மந்திரி.

"அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும். பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்குத் தகுந்த சன்மானம் கொடுங்கள்” என்று உத்தரவு போட்டான்.

அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர்.

அவருக்குப் பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார். தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல…பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.

இரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை.

ஒருநாள் அந்த ராஜா பண்டிதரிடம், “பண்டிதரே! என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு செல்கிறீர்கள். இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே! இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்குச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை…” என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதைக் கேட்டப் பண்டிதர் நடுங்கிப் போய் விட்டார். வீட்டுக்குக் கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள்.

“அப்பா! இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள்? என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானேச் சமாளித்து விடுவேன். நிம்மதியாகப் போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான்” என்றாள்.

“இவள் என்ன உளறுகிறாள்?” என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார்.

கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. “கனவில் கண்ணன் வந்து, பயப்படாதே! நானிருக்கிறேன்” என்று சொல்வது போல் இருந்தது.

மறுநாள், மகளுடன் அரண்மனைக்குச் சென்றார். மன்னனிடம் அந்தச் சிறுமி, “மன்னா! நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்” என்றதும், “சிறுமியான நீ இந்தப் பெரிய விஷயத்துக்கு எப்படிப் பதில் சொல்வாய்?” என்றான் மன்னன் ஆச்சரியமாக.

“மன்னா! நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்தத் தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள்” என்றாள்.

அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர்.

“மன்னா! இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள்” என்றாள்.

அதைக்கேட்ட ராஜா, “உனக்குப் பைத்தியமா! கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்?” என்றார்.

“நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால்தான் ஆத்மஞானம் பெற முடியும். கண்ணனின் கதையைப் படித்தால் மட்டும் போதாது. அவனை அடையக் கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா?” என்றாள்.

மன்னன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மை நிலையை உணர்த்திய சிறுமியை வாழ்த்தி, பொன்னும் பொருளும் அளிக்க உத்தரவிட்டான்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.